Show all

விவசாயிகளுக்காக.. சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருக்க குவிந்த இளைஞர் பட்டாளம்!

சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று மெரினாவில் பேரணி, விவசாயிகளின் தற்கொலை தடுக்க சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் என இளைஞர்கள் பட்டாளம் சென்னையை கலக்கியது. திடீரென கூட்டம் கூடியதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

     சல்லிக்கட்டு, விவசாய பிரச்சனைக்கெல்லாம் சென்னை இளைஞர்கள் வர மாட்டார்கள் என்று இருந்த மாயையை இன்று உடைத்தெறிந்தார் இளைஞர்கள். சல்லிக்கட்டை நடத்தவும், விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கவும் என இளைஞர்கள் சேப்பாக்கம், மெரினா பகுதியில் ஒரே நேரத்தில் கூடியதால் சென்னை திக்குமுக்காடியது.

     பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி சென்னை மெரினாவில் இளைஞர்கள் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

     இதே போன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க வேண்டும் என்று கோரி பல்லாயிரக்கணக்கான இளைஞர் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரதத்தில் பெரும் திரளான பெண்களும் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களது குரலை உயர்த்தி எழுப்பினர்.

     சல்லிக்கட்டுப் போராட்டத்திற்கும், விவசாயிகள் தற்கொலை தடுப்பு உண்ணாவிரதத்திற்கும் முகநூல், கீச்சகம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலமான அழைப்பு மட்டுமே விடுக்கப்பட்டது. அதற்கே அவ்வளவு இளைஞர்கள் ஒன்று திரண்டுள்ளனர். இதன் மூலம் ஜாலியாக சுற்றித் திரியும் இளைஞர்கள் விவசாயம், ஜல்லிக்கட்டு பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள் என்பதை உடைந்து போயுள்ளது.

     சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி நடத்திய இளைஞர்களும், விவசாயி தற்கொலைக்காக உண்ணாவிரதம் இருக்க சேப்பாக்கத்தில் திரண்ட இளைஞர்களும் ஒரே பகுதியில் ஒன்றிணைந்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் பட்டாளமே சென்னைக்கு வந்துவிட்டது போல் சேப்பாக்கம் காட்சி அளித்தது.

     உழைபாளர் சிலை அருகில் பேரணி முடித்த இளைஞர்களும், அதன் அருகில் இருந்த சேப்பாக்கம் விருத்தினர் மாளிகையில் உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களும் ஒன்று கூடியதால், கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த முடியால் காவல்துறையினர் திகைத்துப் போனார்கள். சல்லிக்கட்டு, விவசாயிகள் தற்கொலை என இளைஞர்கள் பட்டாளம் திரண்டதைக் கண்டு காவல்துறையினர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

     வாழ்க தமிழக இளைஞர்களின் புதிய உத்வேகம் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.