Show all

சல்லிக்கட்டு கடற்கரை! உலகின் போராட்ட வெற்றிக்கான முதல் கடற்கரை ; ஆங்கே நடுகல்வழிபாடு ஆயிரம் நிகழட்டும்

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழந்தமிழர் வரலாற்று கிழக்கு எல்லையான கீழைக்கடல் உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள இக்கடல், இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல் கீழைக்கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இந்த மணற்பாங்கான அழகிற்கும், நீளத்திற்கும், உலகின் முதற்கடற்கரை ரையோடிஜெனிரோவையடுத்து,  உலகின் இரண்டாவது கடற்கரையென பெயர் பெற்றிருந்தது இக்கீழைக் கடற்கரை. இக்கடற்கரையை ஒட்டி பேரறிஞர் அண்ணாவால் நடத்தப் பட்ட  இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டின் போது புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நிறுவப்பட்டு மேலும் அழகூட்டப் பட்டது.

அண்ணா அவர்கள் இறந்த போது அண்ணா அவர்களுக்கு இங்கே சமாதி அமைக்கப் பட்டு, இக்கடற்கரை சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்கத் தொடங்கியது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, நடுவண் அரசு, மாநில அரசுகள், தமிழர் பண்பாடு குறித்த பார்வையில்லாத பீட்டா அமைப்புக்கு பணிந்து, தமிழர் பாரம்பரிய சல்லிக்கட்டுக்கு  எதிராக நின்ற நிலையில்- 

தமிழ் இளைஞர்களின் முன்னெடுப்பில், வென்றெடுக்கப் பட்ட சல்லிக்கட்டுக்கான போராட்டத்திற்கு இக்கடற்கரை கலமாய் அமைந்து, சல்லிக்கட்டு கடற்கரை என உலகின் போராட்ட வெற்றிக்கான முதற்கடற்கரையாக வரலாற்றில் இடம் பெற்று விட்டது. 

சென்னையின் தலையாய பகுதியான சல்லிக்கட்டுக்கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. இந்தியாவின் பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தானும் இங்கு நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பர். தமிழர் விழாக்களான ஆடிப்பெருக்கு, பொங்கல் விழா நாட்களில் மக்கள் தங்கள் உறவினர்களுடன் கூடி மகிழும் இடமும் இதுவே. விடுதலை நாள் மற்றும் குடியரசு நாட்களில் அரசுத் துறைகளின் அணிவரிசை நடைபெறும்.

மெரினா கடற்கரையை ஒட்டிய காமராசர் சாலை ஆறுவழிப் பாதையாகும். கடற்கரையின் எதிர்புறம் கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய தொடர்வண்டி நிலையங்களும், விவேகானந்தர் இல்லம், சாந்தோம் ஆகிய பேருந்து நிறுத்தங்களும் உள்ளன. அண்ணா சதுக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன. சுற்றுலா பேருந்துகள் இங்கு நின்றே செல்லும்.

அண்ணா சமாதிக்குப் பிறகு எம்ஜியார் சமாதி எதிர்ப்பை எதிர்கொள்ள வில்லை. செயலலிதா சமாதி, கலைஞர் சமாதிதாம் வெகுவாக எதிர்ப்புக்கு உள்ளாகி விட்டன.

வழக்குகள் முழுவதும் திரும்பப் பெறப்பட்ட நிலையில், சட்டஅடிப்படையில் இரண்டு சமாதிகளுக்கும் இனி சிக்கல் இல்லை.

டிராபிக் இராமசாமி என்றொரு நபர் சென்னைக் கடற்கரையில் சமாதிகளை அப்புறப் படுத்தியே தீருவேன் என்று இன்னமும் வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறார். குளம், கிணறு, ஆறு, கடல் என்று இந்த நீர்ப்பகுதிகளை காலங்காலமாக தமிழர் நினைவேந்தலுக்கான இடமாக கடைபிடித்து வருகிறார்கள். 

நினைவேந்தல், சமாதி இல்லாத வெறுமனே களியாட்டங்களுக்கான கடற்கரை ஐரோப்பியத்தனமானது. டிராபிக் இராமசாமி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சமாதிகள் எல்லாம் தமிழர் நடுகல் வழிபாடு, குலதெய்வ வழிபாட்டின் தொடர்ச்சிகள்தாம். இடம் இருக்கும் வரை எத்தனை ஆயிரம் நடுகல்கள் வேண்டுமானாலும் வாழ்ந்த தலைவர்களுக்கு சல்லிக்கட்டுக் கடற்கரையில் அரங்கேற்றலாம் ; அவை வரலாறுகளாகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,876.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.