Show all

காவிரி வரும்! குடகு மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கன மழை; கைவிரிக்க முடியாது குமாரசாமி

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று காவிரி திறக்கப்பட வேண்டும். ஆனால் குமாரசாமியும், தமிழக முதல்வர் எடப்பாடியும் கைவிரித்த நிலையில்,  காவிரி கழிமுகப் பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் கவலையை பதிவு செய்யும் முகமாக தற்பொழுது போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று குடகு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது.

காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் பெய்து வரும் அடைமழையால் பாகமண்டலா, மடிகேரி, வீராஜ்பேட் உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் மடிகேரி, தலக்காவிரி இடையிலான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

கனமழை காரணமாக நேற்று குடகு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கூட  அளிக்கப்பட்டது. தலக்காவிரி பகுதியில் தொடரும் அடைமழையால் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குடகில் உள்ள ஹாரங்கி அணைக்கு நேற்று ஒரே நாளில் வினாடிக்கு 3,968 கன அடி நீர் வீதம் நீர்வரத்து அதிகரித்தது. 

குமாரசாமி, எடப்பாடி கைவிரித்த நிலையிலும் காவிரித்தாய் இரண்டொரு நாட்களில் தமிழகம் வருவாள் என்று நம்பலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,816. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.