Show all

6பேர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினர் என்று கைது! தூத்துக்குடியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் முதல் முறையாக

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 99நாட்களாக மக்கள் அறவழிப் போராட்டம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்களால் நடத்தப் பட்டு வந்தது. மக்களாக சலித்துப் போய் போராட்டத்தை நிறுத்திக் கொண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில், மாநில அரசும், நடுவண் அரசும் பேச்சுவார்த்தை போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாதிருந்தது.

ஸ்டெர்லைட்டை மூடவேண்டும் என்பது பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனை என்பதாலும், ஸ்டெர்லைட் தனது ஆலையை மேலும் விரிவாக்கும் பணியில் ஈடுபட்டதாலும் மக்கள் இதை உச்ச கட்டப் போரட்டமாகவே முன்னெடுப்பது என்று முடிவு செய்திருந்தனர். அதன் பொருட்டு நூறாவது நாள் போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டமாக அறிவித்து பேரணி நடத்திய போது, இது வரை கிஞ்சித்தும் மக்கள் போராட்டம் குறித்து கவலையுறாத அரசு, நூறாவது நாள் போராட்டத்தில் மட்டும் திடீர் முனைப்பைக் காட்டி 13 பேர்களைக் கொன்று குவித்ததோடு நூற்றுக்கு மேற்பட்டவர்களை காயப்படுத்தி மருத்துவ மனைக்கு அனுப்பியது. 

யார் கலவரத்தை தூண்டியது? யார் பொதுமக்களை சுட்டது? யார் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்தது என்பதிலெல்லாம் தெளிவான தகவல்கள் இல்லை; முன்னுக்குப் பின் முரண்பாடுகள். 

நூறாவது நாள் போராட்டத்தை நடத்தியது சமூக விரோதிகள் என்று பதிவு செய்வதில் மட்டும் கண்ணும் கருத்துமாக அரசு ஈடுபட்டு வருகிறது.

தூத்துக்குடி கலவர வழக்கில், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த ஆறு பேர்களைத் தேடி கண்டுபிடித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது.

நூறாவது நாள் போராட்டத்தில் சமூக விரோதிகள் என்பது தொடர்பாக, தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், வடபாகம், மத்திய பாகம், முத்தையாபுரம் உள்ளிட்ட காவல் துறை நிலையங்களில் மொத்தம் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்குகள் தொடர்பாக 197 பேர்களை கைது செய்தனர் காவல்துறையினர். 

ஆனாலும்  173 பேர்கள் உடனடியாக அறங்கூற்றுமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த கலீல்ரகுமான் அகவை46, அவரது மகன்கள் முகமது யூனுஸ் அகவை23, முகமது இஷ்ரத அகவை22, ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும், உசிலம்பட்டியைச் சேர்ந்த கோட்டையன் அகவை31, கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன் அகவை26, வேல்முருகன் ஆகிய 6 பேரையும், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா ஆகியோர் பரிந்துரையைப் பெற்றுள்ளனர்.

தூத்துக்குடியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிலர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையே, கல்வீச்சு, தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு, அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டோரை காணொளி பதிவுகள், புகைப்படங்கள் மூலம் அடையாளம் கண்டதாகத் தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக பலரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவர்களில், செ.இசக்கிதுரை அகவை58 நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்றும், மதுரை ஒத்தக்கடை சு.சதீஷ் அகவை42, ரா.முருகேசன் அகவை38, உள்ளிட்ட 10 பேரை தற்போது கைது செய்து, அணியப் படுத்தி அறங்கூற்று மன்றத்தில் அணியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,816. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.