Show all

தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் முதல்வர்

     மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது காவல்துறையினர் இன்று காலை அதிரடியாக தடியடி நடத்தினர். இதில் பல பெண்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

     மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெண்களை வெளியேற்ற முயன்ற காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களின் ஆடைகளை காவல்துறையினர் கிழித்ததாக கூறப்படுகிறது.

     சல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னை மெரினாவில் 7வது நாளாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் என லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் நேற்று முதலே காவல்துறையினர் குவிக்கப்பட்டு வந்தனர்.

     இந்நிலையில் இன்று காலை ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தினர்.

பெண்கள், தாய்மார்கள் என்றும் பாராமல் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிதறியோடினர்.

     அப்போது பல பெண்களின் ஆடைகளை காவல்துறையினர் கிழித்ததாக கூறப்படுகிறது. தடியடியோடு நிறுத்தாமல் பெண்கள் மீது கைவைத்து அவர்களின் ஆடைகளை கிழித்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     கடந்த ஏழுநாட்களாக தமிழகமே ஒன்று திரண்டு போராடிய சல்லிக்கட்டுப் போரட்டத்தை அமைதியாக அணுகி  பாராட்டை பெற்று வந்த தமிழக முதல்வர், இன்று அதிரடியாக உலகமே பாராட்டிய தமிழக சல்லிக்கட்டு அறப்போரட்டத்தை; கலைக்க காவல்துறையை ஏவும் முயற்சியில்  ஈடுபட்டு, தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கி விட்டார். கடந்த ஏழு நாட்களாக அவர் நடத்திக் காட்டிய சாதனைகள் எல்லாம் விழலுக்கிறைத்த நீராகி விட்டது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.