Show all

காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கடன் கொடுத்தவர் மகனுடன் தீக்குளிக்க முயற்சி

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு 7 அகவை மகனுடன் விசைத்தறி அதிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் குமார் அகவை44. விசைத்தறி அதிபர். இவரது மகன் ரித்தீஸ்குமார் அகவை7. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை குமார் தனது மகனுடன் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு வந்தார். திடீரென அவர் தான் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணையை எடுத்து தன் மீதும் மகன் மீதும் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் ஓடிச்சென்று குமாரின் கையில் இருந்த தீப்பெட்டியை பிடுங்கி எரிந்தனர். பின்னர் குமாரையும், ரித்தீஸ்குமாரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது குமார் காவல்துறையினரிடம் கூறியதாவது:-

நான் தமிழ்தொடர்ஆண்டு-5117ல் (2015) எங்கள் பகுதியைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி மோகன்ராஜ் என்பவருக்கு ரூ. 10 லட்சம் கடன் கொடுத்தேன். ஆனால் பணம் கொடுத்த 2 ஆண்டுகளாக பணத்தைத் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்ராஜைச் சந்தித்து பணத்தைக் கேட்ட போது அவர் என் மீது கந்து வட்டி புகார் கொடுத்து விடுவதாக என்னை மிரட்டினார். நான் இது குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்த போது அவர்களும் தற்போது உள்ள சூழ்நிலையில் அவர் சொல்லுவதுதான் நியாயமாகும் எனவே நீயே அவரிடம் சென்று பேசி பணத்தை வாங்கி கொள் என்று கூறிவிட்டனர்.

எனவே என்ன செய்வது என்று தெரியாமல் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மகனுடன் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார்.

தொடர்ந்து குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

- நலிந்த மக்களை அரசு அம்போ என்று விட்டு விடுகிற போது அவர்களைக் காப்பாற்ற முன் வருகிறவர்கள் அதை ஒரு வணிகமாக முன்னெடுக்கும் போது, கூடுதல் ஆதாயம் பார்க்க முனைவதும், எதிர் சாரர் அனுதாபத்;;;;;;;தை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதும், சில நேரங்களில் யாராவது ஒருவர் முற்றாகப் பாதித்து விடுவதும் நடக்கும்; பாதிக்கச் செய்தவருக்கு தண்டனை என்பதை தீர்வாக முன்வைத்து அரசு செயல் படும் போது, அதை நிருவாகப் படுத்துகிற அரசு ஊழியர்கள் தலைதான் உருளும்.

பாரபட்சம் இல்லாமல் அனைத்து மக்களிடமும் வரி வாங்குவது அரசு!

நலிவடையும் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையது அரசு!

நலிந்த மக்களை அரசு அம்போ என்று விட்டு விடுகிற போது- வணிக ஆதாயத்திற்காக அவர்களைக் காப்பாற்ற முன் வருகிற நிறுவனம் சாராத தனி மனித கந்து வட்டிக் காரர்களை உருவாக்குவது அரசு!

ஒவ்வொரு மனிதனிடமும் வரி வாங்குகிற உரிமையுள்ள அரசுக்குதான் நலிகிற மக்களை பாதுகாக்கிற முழு பொறுப்பும் உள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்குமான ஒரு கடனுதவித் தொகையை அரசுதான் பொறுப்பெடுக்க வேண்டும். அப்போது தான் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு முடிவு வரும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.