Show all

மொழியைக் குழந்தைகளின் டயபராக உருவகித்த கமல்! நாணிக் குனியும் தமிழ்சான்றோர் பெருமக்கள்.

‘விழிபோல எண்ணி நம்மொழி காக்க வேண்டும்; தவறான பேர்க்கு நேர்வழிகாட்ட வேண்டும்’ என்று குழந்தைகளுக்கே பாடிதான் எம்ஜியார் அவர்கள் தமிழர்கள் மனதில் இடம் பிடித்தார். குழந்தைகளிடம் டயபர் விளம்பரம் செய்து தமிழர் மனதில் இடம் பிடிக்க முடியுமா கமல்?

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருக்குறள் சொல்லும்: ‘இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளிய ராதலும் வேறு’ என்பதாக. 
தொல்காப்பியம் சுட்டும்:
‘முதனெப்படுவது இடமும் காலமும்’ என்பதாக. 
ஆகவே தமிழர்தம் கருதுகோள்: தொடக்கம் என்பது இரண்டு அடிப்படைகளைக் கொண்டது என்பதாகும். 

அதன் பொருட்டே தமிழர் நியாயம் என்பதும் எப்போதும் இரட்டையானதாகவே அமையும். ஒற்றை நியாயத்தை முன்னெடுப்பது, அறிவார்ந்த பழந்தமிழர்களுக்கு உடன்பாடானதன்று.

ஆத்திச்சூடியில் ஒளவையார், அறம் செய விரும்பு என்று தொடங்குவார். ஈவது விலக்கேல் என்றும் சொல்லுவார். அதே ஒளவையார் ஏற்பது இகழ்ச்சி என்றும் தெரிவிக்கிறார். ஆனால் இரண்டு வகையாக பார்க்கும் போது, குழப்புவது போல் இருக்கும். ஆனால் இது நியாயம் ஒற்றையானது அல்ல என்பதைத் தெரிவிப்பதற்கானதாகும். ஆக நியாயத் தீர்ப்பு வழங்குகிறவன் இரண்டு பக்கமும் நின்று பார்க்க வேண்டும் என்பதற்கானதாகும்.

அறம் எல்லோருக்குமானதுதான் அதற்காக உன்னை இழிவு படுத்தி கொடுக்கப் படும்போது அதை ஏற்பது இகழ்ச்சி என்று தெரிவிக்கிறார் ஒளவையார்.

மோடி அமெரிக்காவில் சென்று தமிழ் உலக முதன்மை மொழி என்கிறார். தமிழகத்திற்கு வந்து தமிழர்களே உங்கள் இட்டலி, வடை பிடிக்கும் என்கிறார். ஒருபக்கம் கீழடியை ஊத்திமூட முயற்சி செய்து கொண்டே வஞ்சனையோடே மோடி வாரி வழங்குகிற ‘தமிழ் தொன்மை மொழி’ பாராட்டுரையை ஏற்றுக் கொண்டு இழிவு அடைந்து விடாதீர்கள் என்று ஒளவையார் தெரிவிக்கிறார் என்பது, தமிழ் நியாயம் அறிந்தவர்களுக்குத்தாம் புரியும். 

ஆக ஒற்றை நியாயத் தீர்ப்பில் உண்மையைக் கொணரவே முடியாது. இன்றைய இந்திய அறங்கூற்று மன்றங்கள் அனைத்தும் ஒற்றை நியாயத் தீர்ப்பை வழங்குவதில்தான் பெருமை கொள்கின்றன. 
சாராய வணிகம் செய்யும் அரசு, குடித்து விட்டு வண்டியோட்டினால் அபராதம், இதுதான் ஒற்றை நியாயத் தீர்ப்பின் அவலம்.

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். மாணவர்கள் முன்னிலையில் பேசிய அவர், 

எந்த மொழியையும் நான் எதிர்க்கவில்லை. மொழி என்பது குழந்தைகளின் டயபர் போன்றது. மொழி ஒரு தொடர்பியல் கருவிதான். எனவே அதை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்று தனது ஒற்றை நியாயத் தீர்ப்பை அரங்கேற்றியிருக்கிறார்.

மொழியை டயபர் என்று உருவகப் படுத்தி அசிங்கப் படுத்தியிருக்கிறார் கமல். அறிஞர்களின் கருதுகோள்களை அடையாளமாகக் கொண்டு உலகினர் மதம், மார்க்சியம் என்று இயங்கி வருகின்றனர். தமிழர் மொழியை அடையாளமாக வைத்து இயங்கி வருகின்றனர்.

மொழி என்பதை ஒற்றையாகப் பார்க்க முடியாது. தாய்மொழி என்ற இடத்தில் அது மிக மிக உயரமானது. மனித இனத்தின் அடையாளமானது. விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது மொழிதான். ஆறாம் அறிவாக ஒட்டுமொத்த உலகை ஆள மனிதனுக்கு பயனளித்து வருவதும் மொழிதான். 

பிறமொழி என்கிற தளத்தில் எந்த மொழியும் அப்படி எந்த பெருமைக்கும் உரியது அல்ல தான். அதற்காக மொழியின் மீதான ஒற்றை நியாயமாக, மொழியை டயபர் என்று உருவகப்படுத்துவது அறியாமையின் வெளிப்பாடு என்றே சொல்ல வேண்டும்.

மனித முன்னேற்றத்தின் அடிப்டையான மொழியை வெறுமனே டயபர் என்று கூறிவிட்டு, அந்த மேடையில் அவர் ஆயிரம் சொன்னார்தான். ஆனால் அவற்றையெல்லாம் முன்னெடுக்க அவரால் ஒன்றும் ஆகாது. ஏனென்றால் அடிப்டையில் கமல் சுழியமாக இருக்கிறார். மொழியைக் கண்ணாக, உயிராக கொண்டு இயங்குகிற தமிழர்கள் அவரைத் தலைமைக்கு அங்கிகரிக்க வாய்ப்பேயில்லை. 

‘விழிபோல எண்ணி நம்மொழி காக்க வேண்டும்; தவறான பேர்க்கு நேர்வழிகாட்ட வேண்டும்’ என்று குழந்தைகளுக்கே பாடிதான் எம்ஜியார் அவர்கள் தமிழர்கள் மனதில் இடம் பிடித்தார். குழந்தைகளிடம் டயபர் விளம்பரம் எல்லாம் அவர் செய்யவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,293.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.