Show all

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளின் தேர்தல் தள்ளிவைப்பு

தஞ்சாவூர் சட்டசபை தொகுதி தேர்தல் 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதால் மீதம் உள்ள 233 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற இருந்தது.

இந்த நிலையில் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தலும் 23-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக நேற்றிரவு தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்தது. பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குதல் தொடர்பான புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.

தஞ்சாவூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும், பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் பார்வையாளர் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் அந்த தொகுதியின் தேர்தல் 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

 

எனவே தஞ்சாவூர் தொகுதியில் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஓட்டு எண்ணிக்கை 25-ந் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது.

தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரங்கசாமியும், தி.மு.க. சார்பில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும், மக்கள் நல கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக ஜெயபிரகாசும் போட்டியிடுகின்றனர்.

 

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதால், இன்று 232 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறும்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.