Show all

வேல்முருகன் சீற்றம்! ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராகவே இதுவரை செயல்பட்டு வருகிறார்

தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் அவர்கள், சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும், ஆளுநர் இழிவுபடுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. என்று தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

26,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராகவே இதுவரை செயல்பட்டு வருகிறாரே அன்றி, ஆளுநராக ஒருபோதும் செயலாற்றவில்லை என தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையாகச் சாடியுள்ளார். அது தொடர்பான, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:

நேற்று- தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் அவர்கள், சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும், ஆளுநர் அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப் பூங்கா உள்ளிட்ட சொற்களை வாசிக்க, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு விருப்பம் இல்லை என்றால், சட்டப்பேரவையை விட்டு மட்டுமின்றி, தமிழ்நாட்டை விட்டே வெளியேறலாம்.

தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த ஓர் அரசை, அரசியல் தெரியாத ஆளுநர் ஆர்.என்.ரவி இழிவுப்படுத்தியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்தியதை போன்று தான். தமிழ்நாட்டுக்கு வந்ததில் இருந்தே, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ்-யின் உறுப்பினராக தான் இதுவரை செயல்பட்டு வருகிறாரே ஒழிய, ஆளுநராக ஒருபோதும் செயலாற்றவில்லை.

ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்று தான். முதல் கட்டமாக ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாட்டிலிருந்து மாற்ற வேண்டும் என தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே வெளியேறிய ஆளுநர், தமிழ்நாட்டை விட்டே வெளியேறலாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

எனது நிலத்திற்கான, எனது மக்களுக்கான அரசியல் செய்ய தெரியாத ஆளுநரை, குடியரசுத்தலைவர் திரும்ப பெற வேண்டும் என்பதே சிறந்த முடிவாக இருக்கும் என தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,489.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.