Show all

பாவம் அன்புமணி! விளைவுகள் விபரீதமாக இருக்கும் என இலங்கையை நடுவண் அரசு எச்சரிக்க வேண்டுமாம்

இனியும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என இலங்கையை நடுவண் அரசு எச்சரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

     உடனடியாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை டெல்லிக்கு அழைத்து, மீனவர் படுகொலைக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

     தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற 22 அகவை இளைஞர் கொல்லப்பட்டார்.

     இலங்கை கடற்படையின் இந்தக் கொலை வெறித் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

     இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் சிங்கள கடற்படையின் அத்துமீறளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

     வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். சிங்களப்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

     இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் விசைப்படகில் சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகுகளில் வந்த சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர்.

     அதைத்தொடர்ந்து அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற 22 அகவை மீனவரின் கழுத்தில் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். ஜெரோன் என்ற மீனவர் இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார். சிங்களப்படையினரின் வெறிச்செயலால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

     வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும், தாக்கிக் காயப்படுத்துவதும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சிங்களப்படையினரின் தாக்குதலில் இதுவரை சுமார் 800 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

     கடந்த 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மீனவரும், மார்ச் மாதம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிறிஸ்டி என்ற மீனவரும் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த அதிர்ச்சி விலகும் முன்பே 2011-ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் வீரபாண்டியன், ஜெயக்குமார் ஆகிய இரு மீனவர்களை சிங்களப்படை கொலை செய்தது. அவர்களில் ஜெயக்குமாரை கடலில் வீசி கயிறு கட்டி பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்று கொலை செய்திருக்கின்றனர்.

     2011-ஆண்டு மே மாதம் உலகக்கோப்பைப் போட்டியில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்தியதை தாங்கிக் கொள்ள முடியாமல் 5 மீனவர்களை சிங்களப்படை சித்திரவதை செய்து கொலை செய்தது. அந்த நேரத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இதுகுறித்த உண்மைகள் வெளிவராமல் தடுக்கப்பட்டன.

     அதன்பின்னர் கடந்த 6 ஆண்டுகளாக மீனவர்களைத் தாக்குவது, கைது செய்வது என்ற அளவிலேயே அட்டகாசங்களை கட்டுப்படுத்தி வைத்திருந்த சிங்களக் கடற்படை இப்போது இளம் மீனவரை கொடூரமாக சுட்டுக் கொண்டிருக்கின்றனர். இலங்கைப் படையினரின் இத்தகைய கொடூரச் செயல்கள் இனியும் தொடர்வதற்கு இந்தியா அனுமதிக்கக்கூடாது.

     இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கச் செல்லும் இரு நாட்டு மீனவர்கள் தவறுதலாக எல்லை தாண்டி வந்தால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது; மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் இரு நாட்டு அரசுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன.

     கடந்த சனவரி 2-ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற இரு நாட்டு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுக்களிலும் இது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகும் தமிழக மீனவரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொலை செய்திருப்பதை பார்க்கும் போது அவர்கள் எந்த ஒப்பந்தத்தையும் மதிக்கத் தயாராக இல்லை என்பது உறுதியாகிறது.

     தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில், இனியும் இலங்கை நட்பு நாடு என்று கூறிக்கொண்டு இதையெல்லாம் இந்திய அரசு சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை டெல்லிக்கு அழைத்து, மீனவர் படுகொலைக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இனியும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.