Show all

செயலலிதா குற்றவாளியில்லை; மெரீனாவில் அவருக்கு நினைவிடம் கட்ட தடையில்லை

முன்னாள் முதல்வர் செயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் குற்றவாளி என்பதில் இருந்து விடுவிப்பதாக உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு நினைவிடம் கட்ட தடையேதும் இல்லை.

     செயலலிதாவைக் குற்றவாளியாக கருதி ரூ.100 கோடி அபராதம் வசூலிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி கர்நாடகா தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உள்ளது. இதன் மூலம் அவர் குற்றவாளி இல்லை என்று உறுதியாகியுள்ளது.

     குற்றவாளியாக சேர்க்கப்பட்ட செயலலிதா மரணமடைந்தை அடுத்து அவர் குற்றவாளி என்பதில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டார் என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவரது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க தடையேதும் கிடையாது. மெரீனா கடற்கரையில் நினைவிடம் கட்ட தடையேதும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

     வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் முன்னாள் முதல்வர் செயலலிதாவிற்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட செயலலிதா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுதலையானார்.

     இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது வழக்கு விசாரணை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்தது. இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

     இதனிடையே சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் செயலலிதா மரணமடைந்ததால் அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடியும் விதிக்கப்பட்டது.

     இதனிடையே செயலலிதாவும் குற்றவாளிதான் என்றும் அவருக்கு நினைவிடம் கட்டக் கூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பியது. அதே நேரத்தில் செயலலிதா மரணித்து விட்டதால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க, கர்நாடக அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. செயலலிதாவையும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், அதன் அடிப்படையில் ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என கர்நாடக தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவில் குறிப்பிட்டது.

     கர்நாடகம் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் பினாகி சந்திரகோஸ், அமித்தவராய் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தாங்கள் வழங்கிய தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை என நீதிஅரசர்கள் கூறியுள்ளனர். செயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை கட்டத் தேவையில்லை என்றும் நீதிஅரசர்கள் தெரிவித்துள்ளனர்.

     செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்க முடியாது என்றும் அவருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை அடுத்து அவரது புகைப்படங்களை இனி அரசு அலுவலகங்களிலோ, அரசு நிகழ்ச்சிகளிலோ பயன்படுத்த தடையேதும் இல்லை.

     செயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட பல கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் நடந்த அரசியல் மாற்றங்கள் காரணமாக நினைவிடம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. கர்நாடகா மாநிலத்தின் மறுசீராய்வு மனுவின் மூலம் உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தனது தீர்ப்பை உறுதிபடுத்தியுள்ளதால் செயலலிதாவிற்கு நினைவிடம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.