Show all

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: கடலோரக் காவல்படை

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் முகாமில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மீனவப் பிரதிநிதிகளிடம், கடலோரக் காவல்படை அதிகாரிகள் மன்னிப்புக் கேட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று கடலோரக் காவல்படையினர் கூறி வந்த நிலையில், மீனவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மன்னிப்புக் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாது எனவும், கடலோரக் காவல்படை உறுதி அளித்துள்ளது. மேலும், மீனவர்களுடன் நட்பை ஏற்படுத்த மாதந்தோறும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தவும் கடலோரக் காவல்படை முடிவு செய்துள்ளது.

ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், தங்களை ஹிந்தியில் பேசச்சொல்லி தாக்கியதாக கரை திரும்பிய மீனவர்கள் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தனர்.

ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, ராமேசுவரம் துறைமுகத்தில் அனைத்து மீனவ சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில், துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதுடன், கைது நடவடிக்கை எடுக்க வேண்டும், இச்சம்பவத்தைக் கண்டித்து புதன்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும், அதனையடுத்து வியாழக்கிழமை ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக, இந்தியக் கடலோர காவல் படை மீது, மண்டபம் கடலோர காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் கொலை முயற்சி, காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,607

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.