Show all

ஆதார் கார்டு இல்லாதவர்கள் மானிய நிறுத்திய மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்

சமையல் கேஸ் மானியம் அளிப்பதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்ற முடிவினை நடுவண் அரசு கைவிட வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் எழுதி வெளியிட்ட பதிவில்,

செப்டம்பர் மாதத்திற்குள் ஆதார் கார்டு விவரங்களை கொடுக்காவிட்டால் சமையல் கேஸ் மானியம் ரத்தாகும் என்ற மோடி அரசு முடிவு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

ஏற்கெனவே சமையல் கேஸ் இணைப்பு வைத்துள்ளவர்கள் சந்தை விலையில் கேஸ் சிலிண்டரை வாங்கி வருகிறார்கள். பிறகுதான் அவர்களுக்குரிய மானியத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த முறையிலும் திடீரென்று மாற்றம் செய்து, ஆதார் கார்டு கொடுத்தால் தான் மானியம் என்று வலியுறுத்துவதும், அப்படி ஆதார் கார்டு விவரங்களைத் தராத வாடிக்கையாளர்களுக்கு மானியத் தொகை நிறுத்தி வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

மோடி அரசின்  இது போன்ற முயற்சி ஏழை எளிய மக்களை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக தாய்மார்களுக்கு பெரும் சிரமத்தை அளிக்கும் முடிவாக அமைந்து விடும்.

ஆதார் கார்டு வழங்குவது குறித்தும், அதன் அவசியம் குறித்தும் செய்தித்தாள்கள், ஊடகங்கள் போன்றவற்றில் விளம்பரம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆதார் கார்டு தொடர்பான வழக்கில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் அரசின் பயன்களைப் பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று எந்த ஒரு குடிமகனையும் வற்புறுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படியொரு சூழலில் சமையல் கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று கூறுவது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளுக்கு முற்றிலும் எதிரானது. மானியம் பெறும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்கு விரோதமானது.

 

அரசின் நலத்திட்டங்களை, மானியங்களைப் பெறுவதற்குரிய சான்றுகளைக் கேட்பது வேறு. இந்த குறிப்பிட்ட சான்று இருந்தால் மட்டுமே அரசின் பயன்கள் கிடைக்கும் என்று கெடுபிடி செய்வது வேறு. ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு கெடு விதிப்பது, கெடுபிடி செய்வது எல்லாம் மக்களுக்கு நலன் பயக்கும் நடவடிக்கையாக அமையாது.

 

ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும் என்று கோருவது மானியம் பெறும் சமையல் கேஸ் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் மறைமுகத் திட்டமே என்ற சந்தேகம் எழுகிறது.

 

ஆகவே ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி வங்கிக் கணக்கு குறித்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை வழங்க வேண்டும் என்றும், என்று ஸ்டாலின் மோடி அரசை கடுமையாக எச்சரித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.