Show all

மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வைகோவை விலக வைத்த 3 காரணங்கள்: திருமாவளவன்

 

 

 

 

     மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்:

     வைகோவின் இந்த முடிவு என்னைப் பொறுத்தவரையில் அதிர்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில்,

விடுதலைச் சிறுத்தைகளோடும் இடதுசாரிகளோடும் நட்புறவு தொடரும் என்று வைகோ அறிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அண்மையில் சில மாதங்களாக கொள்கை அடிப்படையில் ஏற்பட்ட சில முரண்பாடுகளை வெளிப்படையாக விவாதிக்க வேண்டிய நிலை உருவானது. குறிப்பாக, பண மதிப்பு செல்லாது என பிரதமர் அறிவித்தார். இதை ம.தி.மு.க வலுவாக வரவேற்கிறது. வி.சி.க.வும் இடதுசாரிகளும் மிகக் கடுமையாக விமர்சிக்கிறோம்.

     புதுச்சேரியில் அரசியமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டை நடத்துகிறோம். இது முழுக்க பிரதமரின் பொருளாதார நடவடிக்கைகளை கண்டிக்கின்ற வகையில் நடத்தப்படும் மாநாடு.

இந்த மாநாட்டில் ம.தி.மு.க கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று வெளிப்படையாக வைகோ அறிவித்தார். இந்த முரண்பாடுதான், தற்போது வெளிப்படையாகவும் கூர்மையாகவும் வெளிப்பட்டு இருக்கிறது. உயர்நிலைக்குழுவில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதும் அரசியல் நோக்கம் இருக்கிறதா என்பதும் எனக்குத் தெரியாது. பிரதமரின் நடவடிக்கையை மூன்று கட்சிகள் எதிர்த்ததும் ம.தி.மு.க வரவேற்றதும் பொதுவெளியில் பல்வேறு விமர்சனங்களுக்கு இடம் கொடுத்துவிட்டது. அந்த அடிப்படையில் ம.தி.மு.க இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

எங்களுடைய மாநாட்டில் அவர் பெயரை புறக்கணித்துவிட்டோம் என்ற பேச்சுக்கு இடமில்லை. டிசம்பர் 6-ம் தேதி புரட்சியாளர் அம்பேத்கரின் 60-ம் ஆண்டு நினைவுநாள். அப்போது மாநாட்டை நடத்தலாம் என முடிவு செய்தோம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஒப்புதல் அளித்தார் வைகோ. அப்போது ஏற்பட்ட புயல் காரணமாக மாநாட்டை ஒத்திவைத்தோம். பிறகு, கவிஞர் இன்குலாப் மரணத்துக்குச் சென்றபோது வைகோவை அங்கு சந்தித்தேன். மாநாடு குறித்தும் பேசினேன். இது அம்பேத்கரின் நினைவுநாள் மாநாடு மட்டுமல்ல. பிரதமரின் நடவடிக்கைகளைக் கண்டிக்கின்ற மாநாடு. இதில் பங்கேற்பதில் உங்களுக்கு சிக்கல் இல்லையா என்று கேட்டேன். யோசித்துச் சொல்கிறேன் என்றார். அரைமணி நேரத்துக்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்டவர், இந்த நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது. அடுத்த நிகழ்ச்சியில் நாம் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து பங்கேற்போம். நான் பிரதமரின் நடவடிக்கையை ஆதரிக்கிறேன். நீங்கள் மூவரும் எதிர்க்கிறீர்கள். இந்த நேரத்தில் நான் பங்கேற்பது சரியாக இருக்காது என வெளிப்படையாகச் சொன்னார். அதன்பிறகே அழைப்பிதழை அச்சடித்தோம்.

     மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்குவது குறித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேசினோம். சூன் மாதம் அதற்கு வடிவம் கொடுத்தோம். நவம்பரில் இருந்து மே மாதம் வரையில் கூட்டணியாக இயங்கினோம். ஏறத்தாழ ஓராண்டு காலம் மிகச் சிறப்பான முறையில் இணைந்து செயல்பட்டோம். ஆற்றல்வாய்ந்த ஒருங்கிணைப்பாளராக கூட்டணியை வழிநடத்தினார் வைகோ . கூட்டணிக்குள் தே.மு.தி.க.வும் த.மா.காவும் வந்தன. தேர்தலில் ஓர் இடத்தில்கூட எங்களால் வெற்றி பெற முடியவில்லை. இது எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அதன்பிறகு, உடனடியாக தே.மு.தி.க.வும் த.மா.கவும் தொகுதி உடன்பாடு மட்டும்தான் வைத்துக் கொண்டோம். கூட்டணியில் தொடரவில்லை என அறிவித்தன. மே மாதத்துக்குப் பிறகு கடந்த ஆறு மாதங்களாக ஒன்றாகவே பயணித்தோம். அதன்பிறகு பல நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறோம். அண்மையில் மூன்று பிரச்னைகளில் எங்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டன.

1.

     காவிரி பிரச்னையில் தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில், வி.சி.க பங்கேற்பது என முடிவு செய்தபோது, மற்ற மூன்று கட்சிகளும் விரும்பவில்லை. மற்றவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை.

2.

     புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமி போட்டியிட்டபோது, அங்கு மக்கள் நலக் கூட்டணி இயங்காதபோது, நாங்கள் தனித்து முடிவெடுக்கும் சூழ்நிலை உருவானது. புதுவை வி.சி.க நாராயணசாமியை ஆதரிப்பது என முடிவெடுத்து என்னிடம் வந்தார்கள். அங்குள்ள சூழலுக்கு ஏற்ப முடிவெடுங்கள் என்றோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நாராயணசாமிக்கு ஆதரவாகத் தேர்தல் வேலை பார்த்தது. இதில் ம.தி.மு.க.வுக்கு உடன்பாடில்லை.

3.

     பிரதமரின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை. இப்படி அண்மைக்காலமாக, மூன்று பிரச்னைகளில் முரண்பாடு ஏற்பட்ட சூழலில், தொடர்ந்து பயணிப்பதில் நெருக்கடி இருப்பதாக ம.தி.மு.க உணர்ந்திருக்கலாம்.

 

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மதச்சார்பற்ற அணியைக் கட்டமைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறீர்கள். இதில் வைகோவுக்கு உடன்பாடில்லை என்பதை உணர்ந்தீர்களா?

 

சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு, நான் ஓர் அறிவிப்பை வெளியிட்டேன்.

சட்டமன்றத் தேர்தலில் கையாண்ட அதே உத்தியை நாடாளுமன்றத் தேர்தலில் கையாள முடியாது. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குகின்றன. நாடாளுமன்றத் தேர்தலின்போது, மாநிலத்தில் இந்த இரு கட்சிகள் மாநிலத்தில் தலைமை தாங்கினாலும்,  தேசியக் கட்சிகளுடன் அணி சேரவே விரும்புவார்கள் என்று.

அதுதான் நிதர்சனமான போக்காக தற்போது மாறி வருகிறது. நாங்கள் இதுவரையில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் எந்த அணியில் சேருவது என்பது குறித்தும் முடிவு எடுக்கவில்லை.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.