Show all

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு10 லாரிகளில் வெள்ள நிவாரணப் பொருட்கள்

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை 10 லாரிகளில் வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை தெரிவித்தது:

மாவட்டத்திலிருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மூலம் சேகரிக்கப்பட்டவெள்ள  நிவாரணப் பொருள்கள் இதுவரை 10 லாரிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 லாரிகள் நிவாரணப் பொருட்களுடன் சென்னை செல்ல தயார் நிலையில் உள்ளன.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு உதவி பொருள்களான மருந்துப் பொருள்கள், போர்வை, பேஸ்ட், துண்டு, வேஷ்டி, சேலை, மெழுகுவர்த்தி, பாய், உணவுப் பொருள்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், நாப்கின்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தவிர, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக 5 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 10 படகுகள் தயாராக உள்ளன. இவை தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் ஆட்சியர்.

தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உணவு, மருந்துப் பொருள்கள், கொசு மருந்து புகைப்பான்கள், பாதுகாப்பு உபகரணங்கள், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை இரவு சென்னைக்கு மேயர் சாவித்திரி கோபால் அனுப்பி வைத்தார்.

மேலும் சென்னை மாநகரில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக இரு துப்புரவு வாகனங்களுடன் இரு துப்புரவு ஆய்வாளர்கள், நான்கு மேற்பார்வையாளர்கள், நூறு துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வெள்ளிக்கிழமை இரு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது, நகர் நல அலுவலர் செந்தில்குமார், மேலாளர் கிளமண்ட் அந்தோனிராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.