Show all

ஆயத்தமாகி வருகின்றன 2016 சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள்

தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைகிறது. 2016 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன.

இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்தபணிகளை தொடங்கி விட்டன. களத்தில் மூன்றோ அல்லது நான்கோ அணிகள் போட்டியிட்டாலும் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. தலைமையிலான அணிக்கும் தி.மு.க. தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வாக்காளர்களை தன்பக்கம் கவர முதல் - அமைச்சர் ஜெயலலிதா அதிரடி திட்டத்தை வகுத்துள்ளார். ஒரு வாக்குச் சாவடிக்கு ஒருவர் வீதம் 64 ஆயிரத்து 94 வாக்குச் சாவடிக்கும் வாக்கு சேகரிப்பாளர்களை நியமித்துள்ளார். இவர்கள் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். ஏற்கனவே தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

தி.மு.க.வில் வேட்பாளர் தேர்வு தலைமை கழகம் சார்பில் முறையாக அறிவிக்கப்பட்டு அறிவாலயத்தில் நடைபெறுவதுதான் வழக்கம்.

ஆனால் இந்த முறை 234 தொகுதிகளுக்கும் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் செல்வதால் தனது பயணத்தின் போது வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை நேரிலேயே கண்டறிந்து தேர்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சிறிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

ஆனால் சட்டசபை தேர்தலிலும் அதேபோல் கூட்டணி அமைத்து கையை சுட்டுக் கொள்ள தி.மு.க. விரும்பவில்லை. மெகா கூட்டணி அமைத்து ஆளுங்கட்சிக்கு சரியான போட்டியாக விளங்கவே விரும்புகிறது.

தே.மு.தி.க., ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளையும் சேர்த்து மெகா கூட்டணியை உருவாக்குவதில் தி.மு.க. முனைப்பு காட்டுகிறது.

தே.மு.தி.க., 3-வது பெரிய கட்சியாக இருப்பதால் 5 முதல் 10 சதவீதம் வாக்கு வங்கி இருக்கும். அனைத்து தொகுதிகளிலும் பரவலாக ஓட்டுகள் கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் விஜயகாந்த் அதிக அளவில் தொகுதிகளை கேட்பதுதான் பிரச்சினை. அதை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கிறார்கள்.

காங்கிரசை கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் சிறுபான்மையினர் ஓட்டு விழும். அனைத்து தொகுதிகளிலும் குறிப்பிட்ட அளவு ஓட்டுகள் கிடைக்கும். ஆனால் த.மா.கா பிரிந்து சென்ற பிறகு அந்த அளவு செல்வாக்கு இருக்குமா, என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய 5 கட்சிகளும் இணைந்து உருவாக்கி இருக்கும் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தினர் ஆட்சியில் பங்கு என்ற கோஷத்துடன் தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.

இந்த இயக்கத்தினர் கோரிக்கைக்கு தி.மு.க. சம்மதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த இயக்கம் தி.மு.க.வோடு சங்கமம் ஆகிவிடும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தலின் போது முதல் முதலில் கூட்டணி அறிவிப்பை வைகோதான் வெளியிட்டார். அதேபோல் இந்த தேர்தலிலும் ம.தி.மு.க.தான் கூட்டணி அறிவிப்பை முதலில் அறிவிக்கிறது. அடுத்த மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் கூட்டணி அறிவிப்பை வெளியிட போவதாக வைகோ அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி முதல் - அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியதன் மூலம் அ.தி.மு.க - பா.ஜனதா கூட்டணி உருவாகலாம் என்று உறுதியாக நம்பப்படுகிறது. தேர்தல் நெருங்கும் போது தான் இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

பா.ம.க.வை பொறுத்த வரை முதல்- அமைச்சர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டது. எனவே அந்த கட்சி தனித்து போட்டியிடுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.