Show all

ஞானாலயா நூலகத்தை அருகேயுள்ள பல்கலைக்கழகங்கள் தத்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

புதுக்கோட்டையிலுள்ள பழங்கால நூல்களின் பெட்டகமாகத் திகழும் ஞானாலயா நூலகத்தை அருகேயுள்ள பல்கலைக்கழகங்கள் தத்தெடுக்க நடவடிக்கை மேற்கொண்டால் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார் நூலக நிறுவனர் பா. கிருஷ்ணமூர்த்தி.

புதுக்கோட்டை பழனியப்பா நகரிலுள்ள தனது நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலும், கூறியதாவது எனது பவள விழாவை வரும் 16 -ம் தேதி புத்தக ஆர்வலர்களும், நண்பர்களும் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலம், நூலகம் குறித்த விவரம் தெரியாதவர்களுக்கும் தெரியவரும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே இந்த விழாவுக்கு சம்மதித்தேன்.

தென் மாவட்டங்களில் தனி ஒருவரின் பராமரிப்பில் அதிக அளவில் புத்தகங்கள் இருப்பது ஞானலயா நூலகத்தில் மட்டும்தான். தமிழ் ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், வரலாற்று அறிஞர்களுக்கும் வற்றாத அறிவுச்சுரங்கமாக திகழ்கிறது என்றால் மிகையில்லை. கடந்த 1958 -ல் தொடங்கப்பட்டது. 1963 -ல் மீனாட்சி நூலகம் என இவரது தாயாரின் பெயரில் செயல்படத்தொடங்கியது.

1999 -ல் தானும், தனது மனைவி டோரதியும் பணிஓய்வு பெற்றபின் கிடைத்த நிதியில் புதுக்கோட்டை, திருக்கோகர்ணம், பழனியப்பா நகரில் நூலகத்துக்கென தனி கட்டடம் அமைக்கப்பட்டது. இதுவரை(12.8.2015) 1.10 லட்சம் நூல்களும், 1200 சிற்றிதழ்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நூலகம் மூலம் முனைவர், ஆய்வுப்பட்ட மாணவர்கள் 150 பேர் பயனடைந்துள்ளனர். மேலும், லண்டன், பாரீஸ், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, சுவீடன், மலேசியா, பினாங்கு, இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக வந்து வண்ணம் இருக்கிறார்கள். தமிழகத்திலுள்ள சுமார் 13 பதிப்பகங்கள் சுமார் 3000 புத்தகங்களை மறுபதிப்பில் கொண்டுவர இந்நூலகம் உதவியுள்ளது. நூலகத்தை மதுரையிலோ அல்லது சென்னையிலோ அமைக்காமல் புதுக்கோட்டையைத் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம், அனைவருமே புத்தகத்துக்காக சென்னை என்ற புள்ளியை நோக்கிக் குவியும் நிலையைத் தடுக்கவும், புத்தகத்தைத் தேடி கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்ல வேண்டியவர்கள் தமிழகத்தின் மையப்புள்ளியாக உள்ள திருச்சி அருகே உள்ள புதுக்கோட்டைக்கு இலகுவாக வரவேண்டும் என்ற நோக்கில்தான் இந்த ஊரைத் தேர்வு செய்தேன்.

தனி ஒருவராக இதைப்பராமரித்து வரும் நிலையில், நூறு, நூற்றம்பது ஆண்டுகளைக் கடந்த புத்தகங்களை உள்ளடக்கியுள்ள நூலகத்தை அறிவியல் முறைப்படி மேம்படுத்தி விரிவுபடுத்தி பாதுகாக்கவேண்டும் என்பதே அடுத்த இலக்கு. அதன் மூலம் நூல்களை அட்டவணைப்படுத்தி கணினியில் பதிவு செய்து, இணையத்தில் பதிவு செய்வது, மைக்ரோ பிலிம், ஸ்கேனிங் முறையில் மாற்றம் செய்யும் திட்டமுள்ளது. ஆனால், இதற்குத்தேவை நிதி ஆதாரம்.

அதற்கான சூழ்நிலை அமையவில்லை. ஆனால், அருகில் திருச்சி, தஞ்சை, காரைக்குடி ஆகிய ஊர்களில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள் இந்த நூலகத்தைத் தத்தெடுத்தால் போதும், அவற்றின் மூலம் ஆண்டு தோறும் நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். இதை சம்மந்தப்பட்டவர்களிடம் கொண்டு செல்ல வேண்டியது அனைவரின் கடமையாகும் என்றார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.