Show all

தமிழ் களமாடியது! தமிழ்நாடு நாளில், துபாயின் மட்டைப்பந்தாட்டக் களத்தில்

தமிழ்நாடு நாளில் அசத்திய துபாயின் மட்டைப்பந்தாட்டக் களம். ‘நல்லா போடு மச்சி’ ஐபிஎல் தொடரில் தமிழால் இணைந்த பிற மாநில வீரர்கள். இணையத்தைக் கலக்கும் காணொளிகள்.

17,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: துபாயில் நடக்கும் ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்கள் பலர் கலக்கி வருகிறார்கள். வருண் சக்ரவர்த்தி, நடராஜன், வாசிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின் என்று இளம் தமிழக வீரர்கள், அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களும் கலக்கி வருகிறார்கள். 

இவர்கள் எல்லோரும் ஒன்றாக ஆடும் நேரங்களில் தமிழில் பேசிக்கொள்வது வழக்கம். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சக வீரர் வருண் சக்கரவர்தியுடன் தமிழில் பேசுவது இணையம் முழுக்க தீயாகி வருகிறது. 

இந்த நிலையில் நேற்று தமிழகத்தை சேராத இரண்டு வீரர்கள் தமிழில் பேசினார்கள். ஆம் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன், கர்நாடகாவை சேர்ந்த சிரேயாஸ் கோபால் இருவரும் நேற்று களத்தில் தமிழில் பேசிக்கொண்டனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் அணிக்காக ஆடுகிறார்கள். கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சிரேயாஸ் கோபால் பந்து வீசிய போது, இலக்கு காவலில் இருந்த சஞ்சு சாம்சன் தமிழில் பேசினார். நீ இப்படி போடு மச்சி. பந்தை உள்ளே போடு என்று சஞ்சு சாம்சன் தமிழில் பேசினார். நல்லா போடு நல்ல டைம் எடுத்து போடு என்று தொடர்ந்து சஞ்சு சாம்சன் கோபாலுக்கு தமிழில் அறிவுரை வழங்கினார். 

இரண்டு பேருமே வேறு வேறு மாநிலம் என்றாலும் இருவருக்கும் இணைப்பு மொழியாக தமிழ் இருக்கிறது. இரண்டு பேருமே போட்டி முழுக்க நேற்று தமிழில் பேசிக்கொண்டனர். 

இவர்கள் இப்படி தமிழில் பேசிய காணொளி இணையம் முழுக்க தீயாகி உள்ளது. நேற்று தமிழ்நாடு நாளில் இப்படி ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது .

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.