Show all

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடையை ரத்து செய்யக்கோரி வழக்கு

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேலாளர் ஜார்ஜ் ஜான் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, அணி உரிமையாளர்கள், வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க நீதிபதி லோதா கமிட்டி அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த கமிட்டி விசாரணை நடத்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளிட்ட இரண்டு அணிகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடை உத்தரவால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்துக்கும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளான குருநாத் மெய்யப்பனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு எதுவும் எழவில்லை. குருநாத் மெய்யப்பன் ‘பெட்டிங்கில்’ ஈடுபட்டாரே தவிர, மேட்ச் பிக்சிங்கிலோ அல்லது ஸ்பாட் பிக்சிங்கிலோ அவர் ஈடுபடவில்லை. அதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிப்பது இயற்கை நியதிக்கு எதிரானது.

இந்த தடை உத்தரவால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களை, மாற்று அணியினர் ஏலத்தில் எடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவிழந்து போக வாய்ப்பு ஏற்படும். எனவே, ஐ.பி.எல். போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு லோதா கமிட்டி விதித்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வரும் 27-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.