Show all

நுழைவுத்தொகை கட்டாததால் சாம்பியன் பட்டம் பறிப்பு

குத்துச் சண்டை வீரரான அமெரிக்காவின் ஃபிளாய்டு மேவெதரின் உலக வெல்டர் வெயிட் சாம்பியன் பட்டத்தை சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு (டபிள்யூ.பி.ஓ) பறிமுதல் செய்துள்ளது.கடந்த மே 2-ஆம் தேதி "இந்த நூற்றாண்டுக்கான குத்துச்சண்டை' என்று வர்ணிக்கப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் பிலிப்பைன்ஸ் வீரர் மன்னி பாக்கியாவை அடித்து நொறுக்கி வெல்டர் வெயிட் சாம்பியன் பட்டத்தை மேவெதர் கைப்பற்றினார்.

வெற்றி பெற்ற அவருக்கு ரூ.1200 கோடி பரிசாக வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த மேவெதர் தற்போது தனது பட்டத்தை பறிகொடுத்துள்ளார். சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு விதிமுறைப் படி ஒரு குத்துச் சண்டை வீரர் அவரது பரிசுத் தொகையில் 3 சதவீதம் (ரூ.36 கோடி) பங்கேற்பு கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் வெல்டர் வெயிட் சாம்பியனானவர் வேறு போட்டிகளின் பட்டத்துக்கான பெல்ட்டுகளை வைத்திருக்கக் கூடாது.

ஆனால் மேவெதர் பங்கேற்பு கட்டணத்தை செலுத்தாததோடு கூடுதலாக 2 போட்டிகளின் பெல்ட்டுகளை வைத்துள்ளார். இந்நிலையில் குத்துச் சண்டை தேர்வுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்றதற்கான கட்டணத்தை உரிய காலத்துக்குள் மேவெதர் செலுத்தத் தவறிவிட்டார். எனவே உலகக் குத்துச் சண்டை சாம்பியனுக்கான பெல்ட் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்படும்' என்று தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.