Show all

கடுமை காட்டும் உச்சஅறங்கூற்றுமன்றம்! டெல்லி காற்று மாசு தொடர்பாக இந்திய அரசுக்கு கவனஅறிக்கை

டெல்லி- காற்று மாசை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய அரசை கண்டித்த அறங்கூற்றுவர்கள், வாயுப் பெட்டகத்தில் வாழும்படி ஏன் மக்களை கட்டாயப்படுத்துகிறீர்கள், இதற்கு பேசாமல் வெடிகுண்டுகள் மூலம் ஒரேயடியாக மக்களை கொன்று விடலாம் என வேதனையுடன் குறிப்பிட்டனர். 

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு இன்று உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள்- அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு  மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுக்குப் பிறகும், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பது தொடர்வதாகவும், இதனால் ஏற்படும் காற்று மாசால் டெல்லியில் வாழும் மக்கள் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதாகவும், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருவதாகவும் அறங்கூற்றுவர்கள் குறிப்பிட்டனர்.

காற்று மாசை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய அரசை கண்டித்த அறங்கூற்றுவர்கள், வாயுப் பெட்டகத்தில் வாழும்படி ஏன் மக்களை கட்டாயப்படுத்துகிறீர்கள், இதற்கு பேசாமல் வெடிகுண்டுகள் மூலம் ஒரேயடியாக மக்களை கொன்று விடலாம் என வேதனையுடன் குறிப்பிட்டனர். 

இந்திய அரசும், டெல்லி அரசும் தங்களிடையேயான வேறுபாடுகளை மறந்து, ஒன்றாக அமர்ந்து பேசி, நகரின் பல பகுதிகளில் காற்று தூய்மைப்படுத்தும் கோபுரங்களை அமைப்பது தொடர்பான திட்டத்தை 10 நாட்களில் பதிகை செய்யும்படியும் அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். 

தரமான குடிநீர், தூய்மையான காற்று வழங்காததற்காக, மக்களுக்கு இழப்பீடு வழங்க நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது? என்று அனைத்து மாநிலங்கள், ஒன்றியப் பகுதிகளுக்கும் அறங்கூற்றுமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஆறு கிழமை காலத்திற்குள் பதிலளிக்குமாறு உச்சஅறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,347.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.