Show all

சிறப்புச் சலுகையைக் கொண்டாடி வரும் சிக்கிம் மாநிலம்!

இந்தியாவில் காஷ்மீர் சிறப்புச் சலுகை பெற்று வந்த, இந்திய அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் சட்டப் பிரிவு 35ஏ ஆகியவைகளை நீக்கி விட்டது ஒன்றிய பாஜக அரசு. பாஜக அரசின் பார்வையில் சிக்காமல் வருமான வரி இல்லாத மாநிலம் என்கிற சிறப்புச் சலுகையை சிக்கிம் இன்னும் கொண்டாடி வருகிறது.

06,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒவ்வொரு ஆண்டின், இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையின் போதும், வருமான வரி வரம்பு அதிகரிக்காதா என்கிற ஏக்கம் ஒவ்வொரு இந்தியா வாழ் குடிமகனுக்கும் கடந்த எழுபத்தி ஐந்து ஆண்டுகளாக மாறாத நிலைமை ஆகும். 

அப்படி இருக்கும் பொழுது, வருமான வரி செலுத்த வேண்டிய கட்டாயமில்லாத ஒரு மாநிலம் இந்தியாவில் உள்ளது என்றால் அது சிக்கிம் மாநிலம் என்பது வியப்பூட்டும் தகவலே. சிக்கிம் மாநிலம் இமய மலையின் சாரலில் அழகிய புல்வெளிகள், நீல மற்றும் பச்சை வண்ண மலைகள், பனிப்பாறைகள் மற்றும் காட்டுப்பூக்கள் ஆகியவற்றின் இருப்பிடமாக அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாக சிக்கிம் அமைந்துள்ளது. 

இந்தியாவின் வடகிழக்கே உள்ள மிகச் சிறிய மலைப்பாங்கான மாநிலம் சிக்கிம். இதன் வடக்கு மற்றும் வடகிழக்கில் திபெத், கிழக்கில் பூட்டான், மேற்கில் நேபாளம் மற்றும் தெற்கில் மேற்கு வங்காளம் ஆகியன உள்ளன. பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு அழகிய அரசாங்கமாகச் சிக்கிம் இருந்தது. இந்திய விடுதலையின் பொழுது, பழைய சிக்கிம் அரசின் சட்டங்கள் அப்படியே தொடரும் என்கின்ற உத்தரவாதத்துடன் இந்த அரசு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 

இதனை நிறைவேற்றும் பொருட்டு இந்திய அரசியலமைப்பில் 371 (எஃப்) என்கின்ற சிறப்புத் தகுதி உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக சிக்கிம் மாநிலம் தன்னுடைய 1948ம் ஆண்டு வருமான வரிக் கையேட்டை பின்பற்றியது. இந்த வரிக் கையேட்டின் கீழ், சிக்கிம் மாநில மக்கள் ஒன்றிய அரசிற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. 

ஆனாலும் ஒன்றிய அரசால் 2008ம் ஆண்டு இந்தச் சட்டம் களைவு செய்யப்பட்டு அதற்கு மாற்றாக, ஒன்றிய நிதிப் பிரிவு சட்டம் 10 (26அஅஅ) செயல்படுத்தப் பட்டது. இந்த அறிவிப்பின் படி சிக்கிம் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு வரிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த சலுகை அனைத்தும், தொல்பழங் குடிமக்களுக்கு மட்டும் தான். இதன் காரணமாகவே இந்த மாநிலத்தில் வசிப்பவர்களுக்குப் வருமானவரி அட்டையும் தேவைப்படுவதில்லை. அதோடு மட்டுமல்ல, இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு நிறுவனம் சிக்கிம் மாநில மக்களுக்கு இந்திய பங்குச் சந்தை வணிகம் மற்றும் முதலீடு செய்வதற்கு, வருமான வரி அட்டை கட்டாயம் என்கின்ற விதியிலிருந்தும் விலக்கு அளித்துள்ளது. 

சிக்கிம் மாநிலம், கோயால் எனப்படும் புத்த மதகுருவால் ஆளப்பட்டது. இது 1890 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மன்னராட்சிப் பகுதியாக மாறியது. 1947 க்குப் பிறகு, சிக்கிம் இந்தியக் குடியரசுடன் அதனுடைய தனித்தன்மை மாறாமல் இணைந்தது. 

இமயமலைச் சாரலில் உள்ள மாநிலங்களிலேயே அதிகக் கல்வியறிவு விழுக்காட்டையும் தனிநபர் வருமானத்தையும் சிக்கிம் பெற்றுள்ளது. 1973இல், புத்தமத குரு அரண்மனைக்கு முன்னால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக 1975 இல் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின் பயனாக, மன்னராட்சி அகற்றப்பட்டு, மக்களாச்சி ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 1975 இல் சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது. 

சிக்கிம் மாநிலத்தின் அதிகாரப்பாட்டு மொழிகளாக ஆங்கிலம், நேபாளி, சிக்கிமீஸ் மற்றும் லெப்சா ஆகியன உள்ளன. மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பொருட்டுக் குருங், லிம்பு, மாகர், முகியா, நெவாரி, ராய், செர்பா மற்றும் தமாங் ஆகியன கூடுதல் அதிகாரப்பாட்டு மொழிகளாக இங்கு விளங்குகின்றன.
தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,528.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.