Show all

மோடிஅரசு ஏன் உணர்த்தவில்லை! கர்நாடகாவின், காவிரி மேலாண்மை வாரிய எதிர்ப்பு, பிரிவினைவாதம் என்பதை

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் மண்ணில் உற்பத்தியாகிற காவிரி தங்களுக்கே சொந்தம் என்பதே அவர்களுடைய வாதம். சரி ஒரு சொட்டு காவிரி நீர் கூட தமிழகத்திற்கு வேண்டாம். 

அப்படியானால், தமிழகத்திற்கு உடைமையான பொருட்களை எந்த மாநிலமும், நடுவண் அரசும் தங்களுக்கு வேண்டாம் என்று உறுதியளித்தால், நமக்கு ஒரு சொட்டு நீர் கூட காவிரியில் வேண்டவே வேண்டாம். நாம் நடுவண் அரசுக்காகவும், மற்ற மாநிலங்களுக்காக செலவிடுகிற உழைப்பில் ஆயிரம் காவிரிகளை உருவாக்கிக் கொள்ள முடியும். 

இதைக் கேட்டவுடன். தமிழிசை, சுப்பிரமணியசாமி, எச்.இராஜா, பொன் இராதகிருட்டினன், போன்ற பாஜக தொண்டரடிப் பொடிகள் எல்லாம் உடனே, தனித்தமிழ் நாடு கேட்கிறீர்களா என்று நேரடியாக கேட்பார்கள். குய்யோ முறையோ என்று குதியோ குதியோ என்று குதிப்பார்கள். 

இந்தியக் கூட்டமைப்பு என்பது, மாநிலத்திற்கு மாநிலம் ஒன்றுக்கொன்று கொடுத்துப் பெற்றுக் கொள்வது என்கிற அமைப்பு தானே! 

உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்பையும் மீறி, கருநாடகம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று விட்டு கொடுக்க என்ன உரிமை இருக்கிறது பாஜக அரசுக்கு. அப்படி விட்டுக் கொடுப்பதென்றால் எங்களை விட்டு விடுங்கள் இந்த விளையாட்டிற்கு நாங்கள் ஆள் இல்லை என்று கூறுவதற்கு உரிமை இருக்கிறதா இல்லையா! 

இதை தமிழர்கள் இடத்தில் இருந்தா தெளிவு படுத்த வேண்டும்? நடுவண் அரசில் பொறுப்பில் இருக்கிற கட்சிக்கு புரிய வேண்டாமா? கருநாடக அரசியல் வாதிகள் தங்கள் உடைமை மட்டுமே தங்களுக்கு போதும் என்கின்றனரா? நீங்கள் உங்கள் செயல்பாடு பிரிவினை வாதம் என்பதை உணரவில்லையா? என்கிற கேள்வியை நடுவண் அரசுதானே கேட்டு அவர்களை ஒழுங்கு படுத்த முடியும். 

பாஜக தொடர்ந்து இந்த பாரபட்சத்தை வைத்துக் கொண்டு அதிகாரத்தின் மூலம் மட்டுமே எத்தனை நாளைக்கு இந்திய ஒருமைப் பாட்டை எடுத்துச் செல்ல முடியும். இதை புரிந்து கொள்ள முயலாமல், பாஜக நடித்துக் கொண்டேதான் இருக்குமென்றால், நம்முடைய பதில் வேறுவகையாகத்தான் இருக்கும்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,748.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.