Show all

குடியரசு நாள் என்றால் என்ன! இன்று இந்தியாவின் 73வது குடியரசுநாள்

இந்தியா விடுதலை பெற்றதற்குப் பின்னர், நமக்கான இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி அதை முன்னெடுக்கத் தொடங்கிய நாளே இந்தியக் குடியரசு நாள் ஆகும். இந்தியக் குடியரசுநாள் விழா 13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5051 (26.01.1950) தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

13,தை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே இந்தியர்களும் ஆட்சி செய்யும் இரட்டை ஆட்சிமுறையை பிரித்தானியர்கள் நமக்கு வழங்கியிருந்தனர். அதற்கான சட்டங்கள் இந்தியா விடுதலை பெறுவதற்கு 12ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டிருந்தது.

இந்தியா விடுதலை பெற்றதற்குப் பின்னர், நமக்கான இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி அதை முன்னெடுக்கத் தொடங்கிய நாளே இந்தியக் குடியரசு நாள் ஆகும். இந்தியக் குடியரசுநாள் விழா 13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5051 (26.01.1950) தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. 

இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 103 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது முற்றிலும் ஆங்கிலப் பதிப்பாகும். 

அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களில் பெரும்பான்மையினர் ஹிந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் ஹிந்தி  மொழிபெயர்ப்பினையும் உருவாக்கி அங்கீகாரம் பெற்றுக் கொண்டார்கள். மேலும் பதினைந்து ஆண்டுகளில் ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்;தியை இந்தியாவின் அலுவல் மொழியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் எழுதிக் கொண்டார்கள்.

இந்திய விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் ஆங்கிலம் ஒன்றிய மற்றும் மாநில அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தமிழ்தொடர்ஆண்டு-5051 ல் (1950) காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்பு, பதினைந்து ஆண்டுகளில் படிப்படியாக ஹிந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக அமையவேண்டும் எனவும் முன்னெடுத்திருந்தது. நல்லவேளையாக இந்திய நாடாளுமன்றத்திற்கு அதன் பின்னரும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துமாறு சட்டமியற்ற அதிகாரம் வழங்கியும் இருந்தது. 

பதினைந்து ஆண்டுகளுக்குப்பின்னர் ஹிந்தியை மட்டுமே ஒரே அலுவல் மொழியாக ஆக்குவதற்கு மறக்காமல் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அதற்கான செயலாக்கத்தை முன்னெடுக்க முனைந்தார்கள். அந்த நிலையில் மிகச்சிறப்பாக தமிழ்நாட்டிலும் மற்றும் புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து எழுந்த எதிர்ப்பின் விளைவாக ஆங்கிலம் அலுவல்மொழியாக இன்று வரை தொடர்கிறது. 

மேலும், இந்தியாவின் அலுவல் மொழிகளாக தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து ஒன்றிய ஆட்சியை ஹிந்தி மொழித் தலைவர்களே முன்னெடுத்து வரும் நிலையில், ஹிந்தி மொழி வளர்ச்சிக்கு மட்டும் அரசு சார்பாக செலவு செய்யப்பட்டு வருகிறது.

இந்திய அரசியலமைப்பு 13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5051 (ஆங்கிலம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26) அன்று நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், தமிழ்தொடர்ஆண்டு-4936  (ஆங்கிலம்1935) என்னும் சட்டத்திற்கு பகரமாக இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. 

இந்திய அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக தமிழ்தொடர்ஆண்டு-5077ல்  (ஆங்கிலம்1976) நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது.

இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி (federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' (federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக 'ஒன்றியம்' (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில், இறையாண்மை உடைய மக்களாட்சி, சமதர்ம, சுதந்திரக் குடியரசு என்றும், இந்திய ஒன்றியம் என்றும் இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் அடிப்படை உரிமைகளும் அடங்கும்.

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, கடன்களின் பொதி என்பர். 'கூட்டாட்சி முறையை' கனடாவில் இருந்தும், 'அடிப்படை உரிமைகள்' அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையை தென்னாப்பிரிக்காவிடம் இருந்தும், மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,140.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.