Show all

விழித்துக் கொண்டது காங்கிரஸ்! போர்விமான ஊழலுக்கு மோடி நண்பரின் புதிய நிறுவனம்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரபேல் போர் விமான ஒப்பந்தம் முழுவதையும், தனியொரு தொழிலதிபர் ஆதாயம் அடையும் வகையில் பிரதமர் மோடி திருத்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரான்ஸ் அரசிடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு ரூ.59,000 கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் முன்னிலையில், கடந்த 07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (23.09.2017) கையெழுத்தானது.

அதைத் தொடர்ந்து, ரபேல் போர் விமானங்களைத் தயாரிப்பதற்காக, பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமும், இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்து, ‘டஸால்ட் ரிலையன்ஸ் ஏவியேஷன்என்ற கூட்டு நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி உருவாக்கின.

இந்நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், பிரதமர் மோடி, தொழிற்துறையைச் சேர்ந்த தனது நண்பர் ஆதாயம் அடையும் வகையில் ஒப்பந்த விதிகளில் திருத்தம் செய்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, இது தொடர்பாக கூறியதாவது:

செய்தியாளர்கள் எந்தக் கேள்வியை என்னிடம் கேட்டாலும், அதற்கு நான் பதிலளிக்கிறேன். ஆனால், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் நிறுவனம் தொடர்பாக, மோடியிடம் நீங்கள் (செய்தியாளர்கள்) ஏன் கேள்வி கேட்கவில்லை?

இதேபோல், பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில், தனியொரு தொழிலதிபர் மட்டுமே ஆதாயம் அடையும் வகையில், பிரதமர் மோடி திருத்தம் செய்துள்ளார். இதுதொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பாதது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், பொதுத் துறை நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்)’ நிறுவனத்தை மோடி அரசு புறக்கணித்துவிட்டது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறியதாவது:

பிரான்ஸின் ‘டஸால்ட் ஏவியேஷன்நிறுவனம், ஹெச்ஏஎல் நிறுவனத்துக்குப் பதிலாக ‘ரிலையன்ஸ் டிஃபென்ஸ்நிறுவனத்துடன் இணைந்து ரபேல் போர் விமானங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேலும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்ட தொகையை விட 3 மடங்கு விலை கொடுத்து போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதனால், அரசுக்கு பெருமளவில் நிதியிழப்பு ஏற்படும் என்றும் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,609

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.