Show all

யோகி ஆதித்யநாத்தின் அடுத்த புரட்சி

வேளாண் பெருமக்கள் கடன் தள்ளுபடி என்ற பெயரில் உத்தரப்பிரதேசத்தில் உழவருக்கு வெறும் 1 காசு மட்டுமே தள்ளுபடி செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் யோகி ஆதித்யநாத்.

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கருத்துப் பரப்புதலின் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண் பயிர்க் கடன்களை ரத்து செய்வோம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி பாஜக அமோக வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதல்வரானார்.

இந்நிலையில் உழவர்களின் ரூ.36 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இதன்படி, முதல் கட்டமாக 11.93 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய 7,371 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, உ.பி. மாநில அமைச்சர் மன்னு கோரி தலைமையில் கடந்த திங்களன்று நடைபெற்ற விழாவின்போது உழவர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் ஈஷ்வர் தயாள் என்ற விவசாயிக்கு வெறும் 19 காசுகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ராமானந்த் என்பவருக்கு 1.79 காசுகளும், முன்னிலால் போளி என்பவருக்கு ரூ.2-ம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுராவில் உள்ள உழவருக்கு அளிக்கப்பட்ட கடன் தள்ளுபடி சான்றிதழில் வெறும் 1காசு தள்ளுபடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.