Show all

காந்தியைச் சுட்ட நான்காவது குண்டு யாரால் சுடப்பட்டது மீண்டும் விசாரிக்க கோரி வழக்கு

அபினவ் பாரத் அமைப்பின் அறங்காவலரும், ஆய்வாளருமான பங்கஜ் பத்னிஸ் மும்பை உயர் அறங்கூற்று மன்றத்தில் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். மகாத்மா காந்தி கொலை மற்றும் அதன் பின்னணியில் சதி உள்ளதாகவும், அதுகுறித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது வழக்கு மனுவில் அவர் கூறியிருந்தார்.

மகாத்மா காந்தி கொலை குறித்து விசாரித்த ஜே.எல். கபூர் குழு, காந்தி கொலையின் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த சதியையும் வெளிக்கொண்டு வரவில்லை. மகாத்மா காந்தியை நோக்கி கோட்சே சுட்டது மூன்று குண்டுகள்தான் என்று விசாரணை அறிக்கையில் உள்ளது. ஆனால், அவர் உடலில் 4 குண்டுகள் பாய்ந்திருந்தது தெரியவந்துள்ளது. எனவே, நான்காவது குண்டு யாரால் சுடப்பட்டது என்பது குறித்து விசாரித்து கண்டறியப்பட வேண்டும்என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை மும்பை உயர்அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பத்னிஸ் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு அறங்கூற்றுவர்கள் எஸ்.ஏ.பாப்தே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியார் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

 

விசாரணையின்போது, காந்தியை சுட்டதில் மற்றொரு நபரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என மனுதாரர் கூறினார். அப்போது குறுக்கிட்ட அறங்கூற்றுவர்கள்,

நாங்கள் அரசியலுக்குள் போக விரும்பவில்லை, சட்டப்படி போகவே விரும்புகிறோம். இப்போது ஏன் மறுவிசாரணை செய்ய வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்களை தெரிவிக்க வேண்டும்

என்று தெரிவித்தனர்.

அப்போது வழக்கிற்கு வலு சேர்க்கும் வகையில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்தார்.

இவ்வாறு சுமார் 15 நிமிடங்கள் நடந்த வாதத்தின் முடிவில், இந்த விசயத்தில் உச்ச அறங்கூற்று மன்றத்திற்கு உதவி செய்யும்படி மூத்த வழக்கறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான அமரேந்தர் சரணிடம் அறங்கூற்றுவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அப்போது அறங்கூற்றுமன்ற அறையில் இருந்த அமரேந்தர் சரண், அறங்கூற்றுமன்றத்திற்கு உதவி செய்வதாக கூறினார். அத்துடன், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை படித்துப் பார்க்க போதிய அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 30க்கு அறங்கூற்றுவர்கள் ஒத்திவைத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.