Show all

மோடியைக் குற்றஞ்சாட்டிய கோத்ரா ரயில் எரிப்பு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடந்த மதக்கலவரங்களில் மோடி குற்றவாளி இல்லை என்று குஜராத் கீழமை அறங்கூற்றுமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை குஜராத் உயர்அறங்கூற்று மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

பெப்ரவரி 27, 2002 அன்று அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டியை கோத்ரா தொடர்வண்டி நிலையத்தின் அருகே வன்முறையாளர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

இதில் 14 குழந்தைகள் உட்பட 57 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். எரிந்த தொடர்வண்டிப் பெட்டிகளைக் கழற்றி விட்ட பின்னர், தொடர்வண்டி வடோடராவிற்கு சென்றடைந்தது. அங்கு கூடியிருந்தோர், தொடர்வண்டியில் வந்திறங்கிய ஒருவரை கொன்றுவிட்டு, மற்றவர்களைக் கட்டையால் அடித்தனர். அன்றே, அகமதாபாத்தில் இரண்டு பேருந்துகளுக்கு, ஒரு கும்பல் தீயிட்டது.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தொடர்வண்டி எரிப்பு நிகழ்வை கண்டித்தார். இவரைத் தவிர, வேறெவரும் அந்நிகழ்வை கண்டிக்கவில்லை. குஜராத்தின் அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்திலும் எச்சரிக்கை எழுப்பப்பட்டது.

28 பெப்ரவரி 2002 தொடர்வண்டி எரிப்பைக் கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் கடையடைப்புக்குக் கோரினர். குஜராத்தின் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. பாராளுமன்றத்தில் நடந்த அறிக்கைத் தாக்கலை பாஜக மற்றும் சிவ சேனா புறக்கணித்து அமளியில் ஈடுப்பட்டனர். தொடர்வண்டி எரிப்புக்காக பன்னிரெண்டு பேரை கைது செய்தனர். ஆயிரம் பேர் கொண்ட துணை ராணுவப் படையை இந்திய அரசு குஜராத்திற்கு அனுப்பிவைத்தது. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டன. 60 முஸ்லிம்களை இந்து வன்முறைக் கும்பல் கொன்றதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஆறு பேரை காவல்த்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தலைமை அமைச்சரைச் சந்தித்து கலவரத்தைக் கட்டுப்படுத்த கோரினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

வீஹெச்பி தொண்டர்களை அயோத்திக்கு செல்ல வலியுறுத்தியும், கோவில் கட்ட வழி வகுக்காத தலைமை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரின் மேல் குற்றச்சாட்டு எழுப்பியும், தலைமை அமைச்சரை பதவி விலகிடக் கூறினார் ஓம்கார் பாவே எனும் வீஹெச்பி தலைவர்.

இந்திய நடுவண் அரசின் தகவலின்படி இக்கொடிய வன்முறையின் நிமித்தம் 790 முஸ்லிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டும், 2458 பேர் காயமடைந்தும் 223 பேர் காணாமலும் போனதோடு மேலும் 919 பெண்கள் விதவைகளாகவும் 606 சிறார்கள் அனாதைகளும் ஆக்கப்பட்டுள்ளனர்.

அரசு சார்பற்ற மனித உரிமை கண்காணிப்பாளர்களின் தரவுகளின்படி வன்முறையில் இறந்தோரின் எண்ணிக்கை 1000க்கும் அதிகமென கூறப்பட்டுள்ளது. இவற்றில் அதிகமானோர் முஸ்லிம்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் வீடுகள், கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டதுடன், நபர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டும், பெண்கள் கூட்டாக வன்புணர்ச்சிக்கும் உள்ளானார்கள்.

குஜராத் வன்முறையின் போது பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 14 பேர் மார்ச் 3-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிகழ்வு தொடர;பான வழக்குகளே பில்கிஸ் பானு வழக்கு என்று அழைக்கப்படுகின்றன.

ஆஜ் தக் தொலைக்காட்சியும், தெஹல்காவும் இணைந்து நடத்திய புலன் விசாரணையில் வன்முறை குறித்தான தகவல்கள் வெளியாகின. அதில், ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை தீயில் எரித்ததையும், இவைகளுடன் சிறுபான்மை பெண்களை அநியாயமாக கூட்டு வன்புணர்வு செய்த கலவரக்காரர்களுக்கும், அகமதாபாத்தில் உள்ள நரோடா எனும் இடத்தில சுமார் எழுபது பேர்களை கொன்ற பா.ஜ.க தலைவருக்கும் மோடி ஆதரவு தெரிவித்ததையும் அவரது அமைச்சர் பாதுகாப்பு அளித்ததையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியது.

இது குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்து மோடி உள்ளிட்டோர் குற்றவாளிகள் அல்ல என அறிக்கை அளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட கீழமை அறங்கூற்று மன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. இதை எதிர்த்து போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஸாக்கிய ஜாப்ரி மற்றும் சமூக செயற்பாட்டாளர் தீஸ்டா செட்டால்வத் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

மோடி உள்ளிட்டோருக்கு மத கலவரங்களில் பங்கு இருப்பதால் கிழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்துவிட்டு புதிததாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும். இதை குஜராத் உயர் அறங்கூற்றுமன்றம் நிராகரித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.