Show all

பாம்பன் பாலம் கடலுக்குள் அல்லது கடலில் மிகவும் உயரமாக அமைக்கவோ ஆய்வு

சேது கால்வாய் திட்டம் ராமேசுவரம் தீவு பகுதிக்கு வரும்போது பாம்பன் தொடர்வண்டி பாலத்தை கடலுக்குள் அமைக்கவோ கடலில் மிகவும் உயரமாக அமைக்கவோ ஆய்வு செய்து அதன் அறிக்கை இந்திய தொடர்வண்டி துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு தொடர்வண்டி (பாலங்கள்) முதன்மைப் பொறியாளர் சுயம்புலிங்கம் தெரிவித்தார். பாம்பன் கடல் பகுதியில் உள்ள தொடர்வண்டி பாலம் ராமேசுவரம் தீவை இந்திய நிலப்பரப்புடன் இணைக்கிறது. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலம் இதுதான். இந்த பாம்பன் பாலம் 2.3 கி.மீ. நீளம் கொண்டது. இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள 146 தூண்கள் இந்த ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமென்ட் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயப் பொறியாளர் ஸ்கெர்சர் கட்டியதால் இந்த ரயில் பாலத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. பாம்பன் ரயில் பாலத்தின் மத்திய பகுதியில் தூக்குப்பாலம் அமைந்துள்ளது. பாம்பன் ரயில் பாலம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. 102 ஆண்டுகளைக் கடந்த இப்பாலத்தின் பழைய இரும்பு கர்டர்களை அகற்றிவிட்டு புதிய கர்டர்களை அமைக்கும் பணி மூன்று கட்டங்களாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும் நடுக்கடலில் உள்ள தூக்குப்பாலத்தை புதிதாக மாற்றி அமைக்க ரூ.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்வண்டி தலைமை பாதுகாப்பு ஆணையர் ஆர்.கே.கர்தாம், தெற்கு தொடர்வண்டி (பாலங்கள்) முதன்மைப் பொறியாளர் சுயம்புலிங்கம் ஆகியோர் பாம்பன் ரயில் பாலத்தை நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் ஆர்.கே.கர்தாம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாம்பன் ரயில் பாலம் அமைக் கப்பட்டு 102 ஆண்டுகளைக் கடந்தபோதிலும் உறுதித் தன்மையுடன் உள்ளது. பாலத்தின் நடுவில் உள்ள தூக்குப்பாலம் முழுவதும் மனித ஆற்றலினால் இயங்கக் கூடியது. புதிதாக அமைய உள்ள தூக்குப் பாலம் முற்றிலும் இயந்திர முறையில் இயங்கக் கூடியதாக வடிவமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தூக்குப்பாலத்தை இரு பக்கங்களிலும் தூக்குவதற்கு ஆகும் நேரம் 30 நிமிடத்தில் இருந்து 5 நிமிடமாக குறைந்து விடும் என்றார். தெற்கு தொடர்வண்டி (பாலங்கள்) முதன்மைப் பொறியாளர் சுயம்புலிங்கம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சேது கால்வாய் திட்டம் ராமேசுவரம் தீவு பகுதிக்கு வரும்போது பாம்பன் தொடர்வண்டி பாலம் கடலுக்குள் அமைக்கவோ அல்லது கடலில் மிகவும் உயரமாக அமைக்கவோ ஆய்வு செய்து அதன் அறிக்கை இந்திய தொடர்வண்டி துறையிடம் அளிக்கப் பட்டுள்ளது” என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.