Show all

பெற்ற முன்பதிவு தொகையை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் திருப்பித்தர முடிவு

மலிவு விலை சீர்மிகுசெல்பேசிக்காக பெற்ற முன்பதிவு தொகையை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் திருப்பித்தர முடிவு செய்துள்ளது.

 

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மொஹித் கோயல் கூறும்போது,

ப்ரீடம் 251 செல்பேசிக்காக 30 ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் பெற்ற முன்பதிவு தொகையைத் திருப்பித் தருகிறோம். செல்பேசியைத் தரும் போது அந்தத் தொகை பெற்றுக் கொள்ளப்படும் என்றார்.

 

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு

‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் உலகின் மலிவு விலை சீர்மிகுசெல்பேசியை ரூ.251-க்கு அறிமுகம் செய்தது. இதை ஆன்லைனில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

 

இதன்படி, முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 30 ஆயிரம் பேர் ஆர்டர் செய்தனர். அவர்களிடமிருந்து தலா ரூ.251 பெற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், பல லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் சிறிது நேரத்திலேயே அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது.

 

இதன்பிறகு 24 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் முன்பதிவு தொடங்கியது. அப்போது, ஒரு மின்னஞ்சல் மற்றும் ஒரு செல்போன் எண்ணிலிருந்து ஒரே ஒரு சீர்மிகுசெல்பேசிக்கு மட்டுமே முன் பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கான தொகையைப் பெற்றுக்கொள்ளவில்லை. பணம் பெற்றுக்கொள்வது பற்றிய விவரம் வாடிக்கையாளர் பதிவு செய்து கொண்ட மின்னஞ்சல் மூலம் 48 மணி நேரத்தில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு எவ்வித மின்னஞ்சலும் அனுப்பப்படவில்லை.

 

பணத்தை திருப்பித்தருவது குறித்து ரிங்கிங் பெல்ஸ் நிறுவன தலைவர் அசோக் சத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தவும், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

 

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பின்புலம், நிதி ஆதாரம் பற்றி பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பாக, இத்துறை சார்ந்தவர்கள் தொலைத்தொடர்பு அமைச்சகத்தில் இதுதொடர்பாக புகார் செய்துள்ளனர். இந்நிலையில், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் குறித்த விசாரணையை அமலாக்கத் துறை தொடங்கி உள்ளது. நிறுவனத்தின் உரிமையாளர்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், நிதி ஆதாரம் உள்ளிட்ட அம்சங்களை அமலாக்கத் துறை கண்காணித்து வருகிறது. இதுபோல வருமான வரித் துறையும் இந்த நிறுவனத்தை கண்காணித்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.