Show all

பிரதமரைவிட அவ்வம்மாநில முதல்வருக்குத்தான் மக்கள் அதிக முதன்மை தருகிறார்கள்: கருணாநிதி.

இந்தியாவில் அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள் போன்ற அரசியல் தலைவர்களின் படங்களைப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியக் குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரது படங்களை மட்டுமே தேவைப்படும் பட்சத்தில் உரிய அனுமதி பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோரைக் கொண்ட அமர்வு கடந்த மே மாதம் 13ஆம் தேதியன்று இந்த உத்தரவை வழங்கியிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உள்ளிட்ட சில தரப்பினர் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

மாநில முதல்வர்களின் படத்தை வெளியிடக் கூடாது என்கிற இந்தத் தீர்ப்பு, மாநில உரிமைகளைப் பறிக்கும் தீர்ப்பு என்று கூறி தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமருக்கும் மாநில முதல்வருக்கும் சமமான அந்தஸ்து உண்டு என்றும், சொல்லப்போனால் மாநிலங்களில் பிரதமரைவிட அம்மாநில முதலமைச்சருக்குத் தான் பொதுமக்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள் என்றும் கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் போன்றோர் இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று கூறி வரவேற்றார்கள்.

பத்திரிகை, தொலைக்காட்சி, திரையரங்குகளில் செய்யப்படும் தமிழக அரசின் விளம்பரங்களில் முதலமைச்சரான ஜெயலலிதாவின் படங்கள், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் கூட பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய விஜயகாந்த், அரசு விளம்பரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நியாயமானது தான் என்றார்.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் தொடர்பான வாதங்கள் நீதிமன்றத்தில் தொடரும் சூழல் உருவாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.