Show all

ராஜபக்சே சுப்பிரமணிய சாமியின் அழைப்பின் பேரில், இந்தியா வந்து கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் சுற்றுப் பயணம்

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமிக்கு நெருக்கமான நண்பர், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே. ராஜபக்சே சுப்பிரமணிய சாமியின் அழைப்பின் பேரில், இந்தியா வந்து கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் சுற்றுப்; பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு: 

கேள்வி: இலங்கை- தலைமன்னார் இடையே பாலம் கட்டப்படலாமா? 

பதில்: இலங்கை , தலைமன்னார் இடையே படகு போக்குவரத்து உள்ளது. இதனால் பாலம் தேவையில்லை. ராமர் பாலம் இடிக்கப்பட வேண்டியது இருக்கும். இதற்கு செலவு அதிகம் ஆகும். 

கேள்வி: செலவை இந்தியா ஏற்று கொண்டால்? 

பதில்: அப்படி இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனாலும் அது சாத்தியமில்லை. 

கேள்வி: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுகிறார்களே? 

பதில்: நாங்கள் யாரையும் சுடுவதில்லை, சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் ஒரு சில சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதில் தனக்கு உடன்பாடு இல்லை . இது தொடர்பாக இரு நாடுகளும் பேசி தீர்க்க வேண்டும். மீனவர்களுக்கு பன்னாட்டு எல்லை தெரிவதில்லை. மீனவர்கள் எல்லை தாண்டும் போது இரு தரப்பினருக்கும் மீன் கிடைக்காமல் போய்விடும். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். மீனவர்களை கைது செய்து விடுவித்து விடுகிறோம். படகுகளை மட்டுமே பறிமுதல் செய்கிறோம்.

கேள்வி: இலங்கை போருக்கு இந்தியா உதவியதோ? 

பதில்: இந்தியா மட்டுமல்ல. பல நாடுகள் உதவின. அதனால் எதிரிகளை முடித்து கட்ட முடிந்தது. இந்தியாவின் உதவி பாராட்டுதலுக்குரியது. 

கேள்வி: ராஜிவ் கொலையாளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது குறித்து பெரும் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன? 

பதில்: அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்தியாதான் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் தலையிட விரும்பவில்லை. 

கேள்வி: இந்த குற்றவாளிகளில் இலங்கையை சேர்ந்தவரும் உள்ளனரே, இலங்கையில் நுழைய அனுமதிப்பீர்களா? 

பதில்: இலங்கை எல்லைக்கடவு வைத்திருக்கும் யாரும் வரலாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,913.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.