Show all

ஓ! அப்படியா. பாஜக 4800 கோடி திராவிடச் சிகிச்சையை அதிதீவிரமாக முன்னெடுக்குமா? சிரிக்கும் கருநாடகம்

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி வெல்ல முடியாத தலைவராக இனியும் இல்லை என்பதை கர்நாடக தேர்தல் நிலவரம் காண்பிக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம், கேரளா போன்ற ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் மோடி அலை வீசியது. இந்திரா காந்தி காலத்திற்கு பிறகு, அறுதி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் பாஜக அரியணை ஏறியது. 

இதன்பிறகு மளமளவென 21 மாநிலங்களில் பாஜக கூட்டணிகள் ஆட்சியை பிடித்துவிட்டன. கர்நாடகா, மிசோராம், பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 

ஆனால், அண்மைக் காலமாக பாஜக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. தோற்கடிக்கவே முடியாத தலைவர் என்ற நிலையில் இருந்து மோடியின் நிலை கீழே இறங்கி வருகிறது. வட கிழக்கு மாநிலங்களில் பெற்ற வெற்றியால் பாஜக, களிப்படையும் முன்பே, பாராளுமன்ற இடைத் தேர்தல்களில் தோல்வியடைந்து பாஜக தொண்டர்கள் உற்சாகமிழந்துள்ளனர். 

இந்த நிலையில்தான் கர்நாடக தேர்தல் பாஜகவுக்கு மிகுந்த தலையாயத்துவம் பெறுகின்றது. பெரிய மாநிலமான கர்நாடக தேர்தல் என்பது அடுத்த ஆண்;டு நடைபெற உள்ள பாராளுமன்றத்திற்கு முந்தைய அரையிறுதி ஆட்டத்தை போன்றது. இதில் தோல்வியடைந்தால், பாஜக அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க மனதளவில் தைரியத்தை இழந்துவிடும். மோடி அலை இல்லை என்ற சூழல் உருவாகிவிடும். 

கர்நாடகாவில் ஏற்கனவே ஒருமுறை பாஜக ஆட்சி அமைந்துள்ளது. எனவே அந்த மாநிலத்தில் கூட ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டால், மோடி அசைக்க முடியாத தலைவர் என்ற தகுதியை இழந்துவிடுவார் என நினைக்கிறார்கள் பாஜகவினர். எனவே, கர்நாடக தேர்தலில் வெற்றிபெற்றேயாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது. வாழ்வா, சாவா போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இதே நிலை என்றபோதிலும், அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடிக்கலாம் என கனவு காணும் பாஜகவுக்கும் அதி முதன்மைத் தேர்தலே. ஆனால், கள ஆய்வாளர் சோனல் வர்மா மற்றும் நோவ்முரா ஹோல்டிங்ஸ் அமைப்பு சமீபத்தில் கூறிய கணிப்புப்படி, கர்நாடகாவில் பாஜக கடைசி இருக்கையில் தான் இருக்கிறதாம். காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாம். வென்றேயாக வேண்டும் என்ற குறியோடு உள்ள பாஜக தீவிரமாக களமாடத் தொடங்கியுள்ளது. 

இதுவரை புதிதாக கர்நாடகாவில் 7.5 லட்சம் தொண்டர்களை, அக்கட்சி, சேர்த்துள்ளது. நட்சத்திரப் பட்டாளங்களை கருத்துப் பரப்புதலுக்கு களமிறக்க உள்ளது. 

'ஊரக பகுதி மக்களுக்கு பாஜக எதிரான கட்சி' என்ற தோற்றத்தை மாற்ற உழவுத் திட்டங்கள் பற்றி கருத்துப் பரப்புதல் நடந்து வருகிறது. 

ஒருவேளை கர்நாடகாவில் பாஜக சிறப்பான வெற்றியை பெற்றால், இவ்வாண்டு இறுதியில், அதாவது, முன்கூட்டியே பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் பாஜக தோற்றாலோ, மோடி அலை இல்லை என்ற தோற்றம் நாடு முழுக்க பரவும் என்பதால், லோக்சபா தேர்தலை அடுத்த ஆண்டு சந்திக்க பாஜக ஆயத்தமாகும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். ஓ! அப்படியா பாஜக 4800 கோடி திராவிடச் சிகிச்சையை அதிதீவிரமாக முன்னெடுக்குமா? என்று மக்கள் கண்சிமிட்டி சிரிக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,736.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.