Show all

யாருக்கு வேண்டும் இந்தத்திட்டம்! பகடியாடும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள்

அண்மைக் காலமாக 'இணையம் கிடைக்கவில்லை' என்ற குற்றச்சாட்டோடு தொலைத் தொடர்பு நிறுவனத்தை மாற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருகிறது.

30,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஏர்டெல் நிறுவனம் தனது ஏர்டெல் தீவிர உறுப்பினர்களுக்கு புதிய உயர்மதிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய திட்டத்தின்படி ரூ.149 மாத சந்தா செலுத்தினால், உலகளவில் உள்ள 15 எண்ணிமத் தளங்களின் அணுகல் கிடைக்கின்றன.

தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், ஏர்டெல் தீவிர உயர்மதிப்பு (எக்ஸ்ட்ரீம் பிரீமியம்) சேவையை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது புதிய ஒருங்கிணைந்த கட்டணத் திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையில், வாடிக்கையாளர்கள் 15 பேரறிமுகமான காணொளி எண்ணிமத் தளங்களின் அணுகலை மாத கட்டணம் செலுத்தி பெற முடியும்.

மீடியா பார்ட்னர்ஸ் ஆசியா வெளியிட்டுள்ள பகுப்பாய்வு அறிக்கையின்படி, அடுத்த மூன்று ஆண்டு அளவில், இந்தியாவின் எண்ணிமத்தள சந்தை தற்போதைய 500 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற மதிப்பில் இருந்து பில்லியம் டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களில் எண்ணிமத் தளங்களின் ஆதிக்கம் வரும் காலங்களின் அதிகளவில் இருக்கும்.

இந்த நிலையில், ஏர்டெல் தீவிர உறுப்பினர் மாதத்திற்கு ரூ.149 செலுத்தி எண்ணிமத் தளங்களை அனுபவிக்க முடியும். முறையே ஆண்டுக்கு ரூ.1,499 செலுத்தி ஒரு ஆண்டுக்கான 15 எண்ணிமத் தளங்களின் அணுகலைப் பெறலாம். என்று ஏர்டெல் எண்ணிமத் தளத்தின் தலைமை செயல் அலுவலர் ஆதர்ஷ் நாயர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், இந்த கட்டண சேவை மூலம் 20 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை பெற முடியும் என நிறுவனம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிகம் உறுப்பினர்களைக் கொண்ட 15 எண்ணிமத் தளங்கள் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுவும் மலிவு விலையில் என்று ஆதர்ஷ் கூறியுள்ளார்.

ஏர்டெல் பயனர்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படுகிறது. செல்பேசி, மாத்திரை, மடிக்கணினி, மிடுக்குத் தொலைக்காட்சி, தீவிர அமைவுப் பெட்டி (எக்ஸ்ட்ரீம் செட்-டாப்-பாக்ஸ்) ஆகியவற்றில் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். ஏர்டெல் ஒவ்வொரு தீவிர உயர்மதிப்பு உறுப்பினருக்கும் ஒற்றை பயன்பாடு, ஒற்றை கட்டணம், ஒற்றை உள்நுழைவு, ஒருங்கிணைந்த உள்ளடக்கத் தேடல் மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தனிப்பயனாக்கப்பட்ட பட்டியல் ஆகியவற்றை வழங்குகிறது.

சரி, நல்லது! முதலில் இணையம் சரியாக கிடைப்பதற்கு உரிய வழியை முதலில் பாருங்கள். இல்லாவிட்டால் யாருக்கு வேண்டும் இந்தத் திட்டம் என்று பகடியாடுகின்றனர் ஏர்டெல் வாடிக்கையாளர்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,157.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.