Show all

10நாட்கள் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டிவிடுங்கள். அப்புறம் மக்கள் நலக்கூட்டணி ஆட்சிதான்

திராவிடக் கட்சிகளிடம் பணம் இருக்கிறது; என்னிடம் மன பலம் இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கூறினார்.

 

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னை விருகம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கருத்துப்பரப்புதலில் ஈடுபட்ட விஜயகாந்த் பேசியதாவது:

 

விருகம்பாக்கம் பகுதிக்கு பல முறை வந்துள்ளேன். அண்மையில், வௌ;ள பாதிப்பின்போது இந்தப் பகுதிக்கு நான் மட்டுமே வந்தேன். ஆனால் அதிமுக, திமுக நிர்வாகிகள் யாரும் வரவில்லை.

 

இந்தத் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போர். நாங்கள் ஆறுமுகம். எங்களுக்கு எப்போதுமே ஏறுமுகம்தான். திராவிடக் கட்சிகள் தேமுதிக தேர்தல் அறிக்கையை காப்பியடிக்கின்றன.

 

திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை பெரியார், காமராஜருக்கு ஒப்பாகவும், ஏழை எளியவர்களின் பாதுகாவலர் எனவும் பேசியிருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

காங்கிரஸ், திமுக இருவருமே கொள்ளையடிப்பதில் கூட்டாளிகள். 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் என பல்வேறு ஊழல்களில் இந்தக் கட்சிகள் ஈடுபட்டன.

 

அதே போன்று அதிமுகவினர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே, திமுக, அதிமுக இரண்டுமே நஞ்சுச் செடிகள். கடந்த 50 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்து கொள்ளையடித்திருக்கின்றனர். இந்தக் கட்சிகளால் எந்தவொரு வளர்ச்சியோ மேம்பாடோ ஏற்படவில்லை. 50 ஆண்டுகளாக அதே சாலைகள்தான் இருக்கின்றன. எந்த மாற்றமும் இல்லை. வாக்களித்து வாக்களித்து மக்கள் சோர்ந்து போய்விட்டனர்.

 

மதுவிலக்கே முடியாது என்ற அதிமுக, இப்போது தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறியிருக்கின்றனர். இதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

 

தேர்தல் முடிவுகள் குறித்து பல கருத்துக்கணிப்புகள் வருகின்றன. தங்களுக்கு வேண்டிய ஊடகங்கள் மூலம் இரு கட்சிகளும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதிலும் அவர்கயள் கூட்டணிதான். இவையெல்லாம் கருத்துத் திணிப்புகள் மட்டும்தான்.

 

திமுக, அதிமுகவிடம் பணபலம் உள்ளது. என்னிடம் மனபலம் உள்ளது. இன்னும் 10 நாள்கள் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டிவிடுங்கள். மக்கள் நலக்கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றார் அவர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.