Show all

மும்பையில் நடைபெற்ற மேக் இன் இந்தியா வார விழா நிகழ்ச்சியில் தீ விபத்து

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மேக் இன் இந்தியா வார விழா நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

 தீ விபத்தையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், ஆமிர் கான் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 மேக் இந்தியா வார விழாவை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த விழா, வரும் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள், வெளிநாடு, உள்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பங்கேற்று வருகின்றனர்.

 இந்நிலையில், விழாவில் 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் குழுமி இருந்தனர்.

 அப்போது, கலை நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து மேடையில் இருந்த கலைஞர்கள் அங்கிருந்து பதற்றத்துடன் ஓடினர். மேடை முழுவதும் தீ வேகமாகப் பரவியது. நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இதனைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து வரவழைக்கப்பட்டன. மொத்தம் 16 தீயணைப்பு வாகனங்களின் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.

 இந்தத் தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.