Show all

பாரு பாரு நல்லா பாரு அபினந்தன் மீசை பாரு! அபினந்தன் மீசைக்கு எகிறும் மவுசு

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைநகர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை மையாக வைத்து இந்தியாவில் ஒரு புதிய தருணம் உருவாகி வருகிறது. 

பத்திரமாக நாடு திரும்பிய அபிநந்தனை இந்தியர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவரின், மிதிவண்டி கைப்பிடி மீசையும் பல இளம் இந்தியர்கள் நடுவே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வட இந்தியாவின் பிரபல பால் நிறுவனமான அமுல் கடந்த வாரம் சனிக்கிழமையன்று, அதன் சமூக ஊடக பக்கங்களில் மீசை தொடர்பான விளம்பரம் ஒன்றை வெளியிட்டு அபிநந்தனுக்கு சமர்பிப்பதாக தெரிவித்திருந்தது. அமுலின் நேர்த்தியான படைப்பாற்றலுக்காக இந்த விளம்பரம் சமூக ஊடக பயனர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அமுலின் இந்த விளம்பரத்தை தொடர்ந்து பல கீச்சுப் பயனர்கள் அபிநந்தனனின் மிதிவண்டி கைப்பிடி மீசையைப் போன்று தாங்களும் மீசையை திருத்தி வைத்துள்ளனர்.

பாகிஸ்தானால் அபிநந்தன் விடுவிக்கப்பட்டதையடுத்து, கீச்சுப் பயனர் நிவேதிதா தனது கீச்சுப் பக்கத்தில், குடும்பத்தினர் அனைவருக்கும் அபிநந்தனின் மிதிவண்டி கைப்பிடி மீசையை மையால் வரைந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அபிநந்தனின் ரசிகன் நான். அவர்தான் உண்மையான மாவீரன், அதனால்தான் அவர் வைத்திருக்கும் மீசையை போன்றே நானும் வைத்திருக்கிறேன். என்று பேட்டியளித்துள்ளார் பெங்களூரை சேர்ந்த முகமது சந்த்.

வட இந்தியாவை சேர்ந்த பலரும் அபிநந்தன் பாணியில் மீசையை வைத்து அந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். சிலர், அபிநந்தன் வைத்திருக்கும் மீசையை போல வளர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள பல முடி திருத்தும் கடைகளில் வாடிக்கையாளர்கள் அபிநந்தன் பாணி மீசையை மிகவும் ஆர்வமுடன் வைத்து கொள்கின்றனர். கடந்த சனிக்கிழமையன்று, பெங்களூருவிலுள்ள ஒரு உள்ளூர் கடையில் குறைந்தது 15 பேர் அபிநந்தன் பாணியில் மீசை வைத்து கொண்டதாக கடையின் உரிமையாளர் சமீர் கான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இன்னும், சில கடைகளில் இவ்வாறு மீசை வைக்க இலவசம் என்று அறிவிக்கப்பட்டதாகவும், சில உரிமையாளர்கள் 50விழுக்காடு கழிவில் வாடிக்கையாளர்களுக்கு மிதிவண்டி கைப்பிடி மீசையை வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,083.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.