Show all

கமல்காசன் கவலை! முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு தொடர்பாக, கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது

இந்திய விடுதலைக்குப்பின் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் தமிழ்ப்பண்பாட்டு அடிப்படைகளைச் செழுமைப்படுத்தி வருகின்றன. தமிழ் நாட்டில் எந்த மதவாதப் பருப்பும் வேகாது. கமலகாசனுக்குக் கவலை வேண்டாம்.

28,தை,தமிழ்த்தொடராண்டு-5123: முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு (ஹிஜாப்) பாடு தொடர்பாக கர்நாடகாவில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள், முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு அணிந்து வர தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். 

இதற்கு பதிலடி கொடுப்பதாக ஹிந்துத்துவா அமைப்புகளைச் சார்ந்த மாணவிகள் காவி துண்டு அணிந்து வந்தனர். இதனால் கர்நாடக மாநில அரசு மாணவ- மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று ஒரு கல்லூரியில் மாணவிகள் முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு மற்றும் காவி துண்டு அணிந்து வந்தனர். மேலும் இருபிரிவினர் கல்லூரிக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அப்போது, பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி மோதல்காரர்களை விரட்டி அடித்தனர்.

அறங்கூற்றுமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்காசன் தனது கீச்சுப் பக்கத்தில் ''கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் நடுவே மதவாத நச்சுச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.'' எனப் பதிவிட்டுள்ளார்.

கருநாடகம், பாஜகவிற்கு கதவு திறந்த தென் மாநிலங்களில் ஒன்றே யொன்றாக இருக்கின்ற காரணம் பற்றி இத்தகைய நிகழ்வுக்கு சாத்தியமாகிறது. மற்றும் இந்தியாவில் தமிழ்நாடு தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரமும் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி ஆதிக்கத்தையும் அதிக விழுக்காடு அங்கீகரிக்கும் வகையாகவே கட்டமைந்துள்ளன. 

தமிழ்நாடு மட்டுமே இந்தியாவிலும் மற்றும் உலக அளவிலும் தனித்துவமான பண்பாட்டுக்குச் சொந்தமானது. தமிழ்நாட்டில் தமிழ்ப் பண்பாட்டைக் கட்டியெழுப்ப- தனிமனிதச் சான்றோர்கள் முன்னெடுத்த வகை;கான எந்த மதமும் அல்லாது- தமிழ்மொழிக்கு சங்கம் வைத்து, கூட்டுச்சிந்தனையில் விளைந்த- 'பொருள் இலக்கணம்' அடிப்படையாக உள்ளது. 

மேலும் இந்திய விடுதலைக்குப்பின் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் அதை செழுமைப்படுத்தியும் வருகின்றன. தமிழ் நாட்டில் எந்த மதவாதப் பருப்பும் வேகாது. கமலகாசனுக்கு கவலை வேண்டாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,155.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.