Show all

இந்திய அரசியல், தமிழகத்தை முன்னோடியாகக் கொண்டு இயங்கத் தொடங்கி விட்டது

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திமுகவி;ன், உலகமே வியந்த திட்டமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைதான் பாஜக நடுவண் அரசு வரவு-செலவுத் திட்டத்தின் மூலமுதல் அடிநாதமாக முன்னெடுத்து,

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்திருக்கிறது. கெஜ்ரிவால் தமிழுக்கு டெல்லியில் உரிமை வழங்கி தமிழர்களுக்கு நட்புக் கரம் நீட்டுகிறார்.

மம்தா பானர்ஜி தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வருகிறார். ஜிக்னேஷ் மேவானி அம்பேத்காரை விட பெரிய பகுத்தறிவுவாதி பெரியார் என்கிறார். பெரியார் மண்ணில் பாஜகவால் கால் பதிக்கவே முடியாது என்று தெளிவுபட பேசுகிறார். தம்முடைய அரசியல் நகர்வுகளுக்கு தமிழகத் தலைவர்களோடு தொடர்பில் இருக்கிறார்.

இவர்கள் எல்லோருக்கும் மேலாக, தமிழ் மொழி முன்னுரிமை, மாநில முன்னுரிமை, என, தமிழகத்தில் திமுகவின் கொள்கைகளில் சிக்கி, காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சியை நிரந்தரமாக இழந்ததை போல,

பாஜகவின் செல்வாக்கை செல்லாக்காசாக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா முழு வீச்சில் முயற்சி மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ராமகிருஷ்ண ஹெக்டே ஆட்சி காலத்திற்கு பிறகு கர்நாடகாவில், தொடர்ந்து மீண்டும் அதே முதல்வர் தலைமையிலான அரசை மக்கள் தேர்ந்தெடுத்தது கிடையாது. ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டையே ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் எடுத்துள்ளனர். அதை இந்த முறை மாற்றிக்காட்ட வேண்டும் என்பதில் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வரான சித்தராமையா தீவிரமாக உள்ளார்.

இதற்காக அவர் தமிழகத்தில் திமுக தொடக்க காலகட்டங்களில் எடுத்ததை போன்ற மாநிலம், மொழி சார்ந்த விசயங்களை முன்னிறுத்தி பாஜகவை பந்தாட தொடங்கிவிட்டார்.

தேசிய கட்சியான காங்கிரசின் முதல்வராக இருந்தபோதும், பெங்களூர் மெட்ரோ தொடர்வண்டி நிலையங்களில் ஹிந்தியில் எழுதப்பட்ட தகவல் அறிவிப்புகளை தார் பூசி அழித்த கன்னட அமைப்பினர் போராட்டங்களுக்கு சித்தராமையா ஆதரவு அளித்தார். ஹிந்தியை அழித்தெடுத்தார்.

தமிழகத்தில் எப்போதோ ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அரசியல் கட்சி என்ற வகையில் அதில் திமுக முன்னிலையில் இருந்தது. ஆனால் கர்நாடகாவில் ஹிந்தி என்பது சகஜமாக ஏற்கப்பட்ட மொழி. பாஜகவை முற்றுகை இடுவதற்காக, தமிழ் போன்ற மொழிகளில் எழுதப்பட்டிருந்தால்தான் போராட்டம் நடத்த கன்னட அமைப்பினர் பழக்கி வைக்கப்பட்டிருந்தனர். தமிழையே பெரும் எதிர்ப்புக்குரிய மொழியாக அவர்கள் பார்த்தனர். ஆனால் பாஜக ஹிந்தியின் மூலம், இந்தியாவின் ஒருமைப்பாட்டை காப்பாற்ற முடியும் என நினைக்கிறது. இதையறிந்து ஹிந்தி என்பது கன்னடத்திற்கு எதிரானது என கருத்துப் பரப்புதல்களுக்கு ஊக்கம் கொடுத்து பாஜகவுக்கு ஆப்பு வைத்துவிட்டார் சித்தராமையா.

நடுவண் அரசில், நாளை மாநிலக்; கட்சிகளின் கூட்டாட்சியை முன்னெடுப்பதற்கு தமிழக அரசியல் வரலாறும், தமிழகம் இதுவரை முன்னெடுத்து வந்த திட்டங்களும் ஒட்டு மொத்த இந்தியாவிற்குத் தேவையாய் இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,689

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.