Show all

எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய விமானப்படை தாக்குதல்

எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் நடத்தப்பட்ட தாக்குதல், அதன்பிறகு அங்கு நிலவும் சூழ்நிலைகள் குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமருக்கான முதன்மை செயலர் நிரிபேந்திரா சிங், பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், நடுவண் அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் சதீஷ் மிஸ்ரா, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் பிரேம் சந்த் குப்தா உட்பட முக்கிய தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதன்பிறகு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே நிலவும் சூழ்நிலைகள், அசம்பாவிதங்களை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ராஜ் நாத் சிங் விரிவாக எடுத்துரைத் தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது நேற்று முன்தினம் நள்ளிரவு தாக்குதலை நடத்த உத்தரவு பிறப்பித்தவுடன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களை தொலைபேசியில் அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்தார். தவிர முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோருக்கும் தொலைபேசியில் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.