Show all

காவிரி கழிமுக உழவர்களுக்கு பெரும் அதிர்ச்சி! காவிரி மேற்பார்வை ஆணையம்தான் அமைக்கப்படுமாம்

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி ஆற்று நீரை, மழை கொட்டித் தீர்க்கும் போது தங்கள் மாநிலப் பாதுகாப்புக்காக அனைத்து நீரையும் திறந்து விடுவது- மழை பாதிப்பு இல்லாத நேரத்தில், ஒரு சொட்டு நீரைக் கூட திறந்து விடாமல் இருப்பதற்கு புதிது புதிதாக அணைகளை கட்டுவது என்கிற அநாகரிகப் போக்கை தொடர்ந்து கருநாடகம் பின்பற்றி வருகிறது. 

மழைபாதிப்பு நேரத்தில் எந்த மண்ணுக்கு கூடுதல் நிரை அனுப்பி தற்காத்துக் கொள்கிறதோ அந்த மாநிலம், பன்னெடுங் காலமாக அனுப்பி வந்த அந்தக் கூடுதல் நீரின் சராசரியை- அந்த மழைஉபரியின் போது பாதுகாப்பளித்த மாநிலத்திற்கு வழங்க வேண்டிய கடப்பாட்டிற்கு உரியது என்பது உலகச் சட்டம். அதை மீறிச் செயல்;பட உரிமையில்லை. என்கிற நிலையில் அதை மதிக்காத அநாகரிகத்தை கருநாடகம் மேற்கொள்கிறது அதை தட்டி கேட்க வேண்டிய நடுவண் அரசு கடமையைச் செய்யவில்லை. கடமை செய்ய வேண்டியதை சட்ட அடிப்படை என்று அறங்கூற்று மன்றம் தெளிவு படுத்தியும் காலம் தாழ்த்தி வருகிறது மோடி அரசு. 

மேலும், காவிரி நதிநீர் பங்கீட்டை செயல் திட்டத்தின் கீழ் 6 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்;டது அறங்கூற்று மன்றம்.

தமிழ்நாட்டுக்கான தண்ணீரின் அளவு குறைக்கப்பட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலாவது, அந்த தண்ணீராவது கிடைக்கும் என்ற நிலை உருவானது.

 

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

அறங்கூற்று மன்றம் விதித்த காலக்கெடு, இன்னும் 4 நாட்களில், முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை நடுவண் அரசு கைவிரித்து விட்டு, அதற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க முடிவு செய்து உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஒரு குறிப்பினை தயார் செய்து நடுவண் அமச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிடுவது பற்றி வலியுறுத்தப்படவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இடையேயான காவிரி நீர் பங்கீட்டை கவனிக்க காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம், ஒரு சுதந்திரமான உறுப்பினர் தலைமையில் இயங்கும். அவர் காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் கூறியபடி தலைமை பொறியாளராக இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆட்சிப்பணித்துறை அதிகாரியாகவோ அல்லது தொழில்நுட்ப வல்லுனராகவோ இருக்கலாம். இது 9 பேரை கொண்டதாக இருக்கும்.

இதில் தலைவர் உள்பட 5 பேர் முழு நேர உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்களை நடுவண் அரசு நியமிக்கும். சம்மந்தப்பட்ட 4 மாநிலங்களும் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பார்கள்.

 

இன்னும் எத்தனை நாளில் இந்த ஆணையம் அமைக்கப்படும் என காலவரையறை எதுவும் கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

காவிரி நடுவர் மன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியம் என்றால், அதில் ஒரு முழு நேர தலைவர், நடுவண் அரசால் நியமிக்கப்படும் 2 உறுப்பினர்கள் இடம் பெற்று இருப்பார்கள்.

தலைவரை பொறுத்தமட்டில் அவர் நீர்வள நிர்வாகத்தில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட தலைமை பொறியாளர் தகுதிக்கு குறைவு இல்லாத நீர்ப்பாசன பொறியாளராக இருக்க வேண்டும்; 2 முழு நேர உறுப்பினர்களில் ஒருவர் தலைமை பொறியாளர் தகுதிக்கு குறைவு இல்லாத பொறியாளராக இருக்க வேண்டும்; மற்றொருவர் விவசாய நிபுணராக இருக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதிலும் நடுவண் அரசு 2 பகுதி நேர உறுப்பினர்களை நியமிக்கும் வேளையில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகுதி நேர உறுப்பினர்களாக இடம் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம்தான் அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருப்பது காவிரி கழிமுக உழவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்து உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,737.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.