Show all

மாமனிதர் குமாரசாமி! இந்தியாவில் துணிச்சலாக தனது நிலையை மக்களுக்கு விளக்கிய முதல்வர்

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடக உழவர்கள் சார்பில் பெங்களூரு தவிர்த்து கர்நாடகாவின் பிற பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் வேளாண் கடன் தள்ளுபடி தொடர்பாக இந்தியத் தலைமை அமைச்சர் மற்றும் நடுவண் அமைச்சர்களை சந்தித்து பேசுவதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று டெல்லி செல்கிறார். 

இதற்கிடையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, வேளாண் கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், கர்நாடக மக்கள் என்னையும், எனது கட்சியையும் புறக்கணித்தனர். தனி பெரும்பான்மை கிடைக்கும் என்று தான் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தேன். இதுகுறித்து உழவர் சங்க தலைவர்களிடமும், காங்கிரஸ் தலைவர்கள் சிலருடனும் பேசி உள்ளேன். 

எனக்கு அதிக அழுத்தம் உள்ளதால், மக்கள் எனக்கு ஒரு கிழமை அவகாசம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், மாநிலத்தின் நிதிநிலைமையை புரிந்துகொண்டு, அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு இதுகுறித்து முடிவு செய்வேன். வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட முடியவில்லை எனில் தாமே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்றும், எனவே பதவி விலக வேண்டும் என்று யாரும் கோர வேண்டியதில்லை எனவும் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

சிறுபான்மை முதல்வர் என்ன செய்ய முடியுமோ அதற்கு ஒருபடி மேலே சென்று கர்நாடக மக்களுக்குச் செயல்பட காத்திருப்பதாகவும், தன்னை மக்கள் ஆட்சிக்காக தேர்ந்தெடுக்க வில்லை; காங்கிரஸ் தான் தன்னை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்திருக்கிறது என்ற நிலையில் எந்த உரிமையில் நடுவண் அரசிடம் நான் சண்டையிட்டு கர்நாடகத்திற்காக எதையும் கேட்டுப் பெற முடியும் ஆனாலும் போராடுவேன். கர்நாடக மக்களுக்கு தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவேன். முடியாவிட்டால் பதவியை விட்டு விலகுவேன் என்று தெளிவாக துணிச்சலாக தனது நிலையை மக்களுக்கு விளக்கியிருக்கிறார். 

தமிழகத்திலும் இதுதானே நிலைமை. பொரும்பான்மை இல்லாத எடப்பாடி- பன்னீர் அணிக்கு பாஜக தனது அதிகார பலத்தால் தமிழக ஆட்சியை வழங்கியிருக்கிறது. தமிழக மக்களுக்காக நின்று ஸ்டெர்லைட்டை மூட தம் அதிகாரத்தை பயன் படுத்தியிருக்க வேண்டும்; முடியவில்லையென்றால் ஆட்சியை விட்டு விலகியிருக்க வேண்டும். ஆனால் 13உயிர்களை பலியிட்ட போதும் கூட ஆட்சயை இழக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லையே. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,801.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.