Show all

ஜியோ இலவச சேவைகளில் விதிமுறை மீறல்: ஏர்டெல் குற்றச்சாட்டு

 

 

     ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் வழங்குவது, நடுவண் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளது என ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளது.

     ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது. அறிமுக சலுகையாக முதல் மூன்று மாதங்களுக்கு வரம்பற்ற 4ஜி தரவுகள், இணையவழி அழைப்புகள் உள்ளிட்ட சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது. அதன் படி ஜியோ இலவச சேவைகள் டிசம்பர் 31, 2016 வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டு சலுகை என்ற பெயரில் ஜியோ இலவச சேவைகள் அனைத்தும் மார்ச் 31, 2017 வரை நீட்டிக்கப்பட்டது.

     ஏற்கனவே ஜியோ அறிவித்த இலவசங்கள் நடுவண் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாக பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்களும் குற்றம் சாட்டின. இந்நிலையில் ஜியோ அறிவித்திருக்கும் புதிய புத்தாண்டு சலுகைகளில் விதிமுறைகள் மீறப்படுவதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து நடுவண் தொலைத்தொடர்பு விவாதங்கள் தீர்வு மற்றும் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் 25 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

     இதில் ஜியோ வழங்கும் இலவச சேவைகள் 90 நாட்கள் என்ற காலக்கெடுவை கடந்துவிட்டது. இதனால் ஜியோ இலவச சேவைகள் வழங்குவது குறித்த விதிமுறை மீறல்கள் தொடர்பாக நடுவண் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தலையிட்டு விரைவில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை இன்று தீர்வு மற்றும் மேல் முறையீட்டு தீர்ப்பாய வளாகத்தில் நடைபெற்றது.

     பாரதி ஏர்டெல் வழங்கி இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான ஆய்வு செய்ய 10 நாட்கள் அவகாசம் தேவை என டிராய் கேட்டு கொண்டுள்ளது. இது குறித்த அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் தங்களின் சேவை கட்டணங்களை குறைத்து வருகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.