Show all

பரப்புரை முன்னெடுப்போம்! அட்டவணை எட்டு மொழிகள் 22க்கும் உரிய அமைப்புகள் தொடங்கவும், ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கவும்

இந்தியாவின் அலுவல் மொழிகள் குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெரிவிக்கிற அடிப்படை வேறாகவும், இந்தியக் குடியரசு அமைந்த நாளில் இருந்து, ஒன்றிய ஆட்சியில் அமைந்தோர் முன்னெடுத்து வருகிற நடைமுறை நூறு விழுக்காடும் வேறாகவும் இருக்கிறது. மீட்டமைக்கப் போராடுவோம்.

06,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவின் அலுவல் மொழிகள் குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெரிவிக்கிற அடிப்படை வேறாகவும், இந்தியக் குடியரசு அமைந்த நாளில் இருந்து, ஒன்றிய ஆட்சியில் அமைந்தோர் முன்னெடுத்து வருகிற நடைமுறை நூறு விழுக்காடும் வேறாகவும் இருக்கிறது.

இந்தியா விடுதலைபெறுகிற போது இரட்டை ஆட்சி முறையில் இந்தியக் குடிமக்களுக்கு ஆளும் உரிமை இருந்தது. அப்போது, இந்தியாவின் ஒன்றிய ஆளுமையாக பிரிட்டனின் அரசவை விளங்கியது. 

சென்னை அரசப்பகுதியில் ஆட்சியுரிமை பெற்றிருந்த காங்கிரஸ், தமிழ்நாட்டுக் கல்வியில் இந்திய விடுதலைக்கு முன்பே ஹிந்தியைத் திணித்தது என்பது வரலாற்றின் கருப்புப் பக்கங்கள். 

காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகான நேரடி ஆங்கிலேயர் ஆட்சியில்தான் காங்கிரஸ் கல்வியில் முன்னெடுத்திருந்த அந்தத் திணிப்பு அகற்றப்பட்டது என்பது- அப்படியா! என்று தமிழனை வியக்கவைக்கும் செய்தியாகும்.

இந்திய விடுதலையின் போது இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டங்கள் ஆங்கில ஆண்டு 1935ல் நடைமுறையில் இருந்த சட்டங்கள் ஆகும். ஆங்கில ஆண்டு 1935ல் நடைமுறையில் இருந்த சட்டங்களுக்கு மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு அந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆங்கில ஆண்டு 1950லிருந்து இன்றுவரை தொடர்கிறது. 

இந்திய அரசியலமைப்பு என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான தன்னுடைமை இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது. இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. 

இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு ஹிந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. 

இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. 

இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. 

நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 என்னும் சட்டத்திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது.

இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி (பெடரிலிசம்) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' கூட்டரசு (பெடரல் கவர்ன்மென்ட்) என்ற சொல்லிற்குப் பதிலாக 'ஒன்றியம்' (யூனியன்) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில், 'இறையாண்மை உடைய மக்களாட்சி, சமதர்ம, தன்னுடைமை (இன்டிபென்டன்ஸ்) குடியரசு' என்றும்  இந்திய ஒன்றியம் என்றும் இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. 

இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, 'கடன்களின் பொதி' என்பர். 'கூட்டாட்சி முறையை' கனடாவில் இருந்தும், 'அடிப்படை உரிமைகள்' அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையை தென்னாப்பிரிக்கா விடமிருந்தும், மாநிலங்களவை நியமன பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது.

இந்திய அரசியலமைப்பு 22 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பனிரெண்டு அட்டவணைகளையும் கொண்டுள்ளது.

நாம் முன்னெடுக்கும் இந்தக் கட்டுரையின் நோக்கம் அட்டவணை எட்டின் சட்டப்பாட்டு நிலையும் நடைமுறை நிலையும் நூறு விழுக்காடும் வேறாக இருப்பதை சுட்டிக்காட்டி ஹிந்தி அல்லாத மாநிலங்களை விழிப்பூட்டும் நோக்கத்திற்கானதாகும். 

இந்தியாவிற்கான அலுவல் மொழிகளாக அட்டவணை எட்டில் சொல்லப்பட்ட 1.தமிழ் 2.அசாமி 3.வங்காளம் 4.ஹிந்தி 5.காஷ்மீரி மொழி 6.கொங்கணி மொழி 7.மலையாளம் 8.மணிப்புரி 9.மராத்தி 10.நேபாளி 11.ஒரியா மொழி 12.பஞ்சாபி 13.சமசுகிருதம் 14.சிந்தி 15.கன்னடம் 16.தெலுங்கு 17.உருது 18.மைதிலி மொழி 19.போடோ மொழி 20.சந்தாளி மொழி 21தோக்ரி மொழி 22.குசராத்தி ஆகியன சமமான உரிமையுள்ள மொழிகள் ஆகும். 

இந்தியா பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்ற காரணம் பற்றியும், ஆங்கிலத்தை இந்தியாவின், தலைமை அலுவல் மொழித் தகுதியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்தை அகற்றினால் அந்த இடத்தில் ஹிந்தியை நிறுவலாம் என்றும் வட இந்தியர்களிடம் ஒருமித்த கருத்து இருந்த காரணம் பற்றியும், பதினைந்து ஆண்டுகளில் ஆங்கிலத்தை அகற்றிவிட வேண்டும் அந்த இடத்தில் ஹிந்தியை நிறுவிவிட வேண்டும் என்றும் காலக்கெடு விதித்தார்கள். 

ஆனால் இன்று வரை ஆங்கிலம் இந்தியாவின்; அலுவல் மொழியாகவும், இந்திய மாநிலங்களுக்கிடையிலான இணைப்பு மொழியாகவும் இருந்து வருகிறது. ஆங்கிலத்தை அகற்றாமல் ஆங்கிலத்தோடு ஹிந்தியையும் சேர்த்து இரண்டு இணைப்பு மொழிப் பளுவை இந்திய மக்களுக்கு கொடுத்து வருகின்றனர் ஒன்றியத்தை தொடர்ந்து ஆண்டுவரும் வடஇந்தியர்கள். 

மேலும் ஆங்கிலத்தை அப்புறப்படுத்துவது என்கிற தலைப்பில் அட்டவணை எட்டில் அங்கீகரிக்கப் பட்ட இருபத்தி இரண்டு மொழிகளைத் தாய்மொழித் தகுதியில் இருந்தும், இந்திய அலுவல்மொழித் தகுதியில் இருந்தும் நீக்கும் நடவடிக்கையில் தாம் இன்று வரை செயலாற்றி வருகின்றனர் ஒன்றியத்தில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் வட இந்தியர். 

நாம்- தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம், அட்டவணை எட்டில் குறித்த இருபத்தி இரண்டு மொழிகளுக்கு தனித்தனி அமைச்சகம், வளர்ச்சிக்கான நிறுவனங்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அந்தந்த மொழியின் அறிஞர்கள், இணையான நிதி ஒதுக்கீடு எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதை தெளிவு படுத்தவும், அறங்கூற்று மன்றம் மூலம் உரிய பயன்களைப் பெறுவதற்கான சட்டப்போரட்டங்களை முன்னெடுக்க தனித்தனியாகவோ, அமைப்புகளாகவோ, மாநிலங்களாகவோ, மாநில நலம் விரும்பும் கட்சிகளாகவோ, மாநில அரசுகளாகவோ, பேராட உறுதி ஏற்போம் போராடி உரிமை பெறுவோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,223.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.