Show all

தமிழ்நாடு காவல்துறை பெற்றிருக்கிறது! குடியரசு தலைவரின் சிறப்புக்கொடி

குடியரசுத் தலைவர் கொடியை பெறும் நிகழ்வை முன்னிட்டு, காவல்துறை தலைமை இயக்குனர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: தென் மாநிலங்களில் முதன்முறையாக குடியரசுத் தலைவரின் கொடி தமிழக காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் விழா, சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கொடியை ஒப்படைத்தார். 

தமிழ்நாடு காவல்துறையினருக்கு மிக உயரிய குடியரசு தலைவரின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் சிறப்பு கொடியை துணை குடியரசு தலைவர், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையின், சட்டம் ஒழுங்கு தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை சார்பில் பேரளவாக செய்திருந்த நிலையில், பாதுகாப்புக்கு 3 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். குடியரசு தலைவரின் கொடி வழங்கல் நிகழ்ச்சிக்கு பிறகு ஓரிரு மாதங்களில் காவல் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை தங்களது சீருடையில் குடியரசு தலைவரின் கொடியை கட்டாயம் அணியும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 

தமிழ்நாடு காவல்துறைக்கான புதிய சின்னத்தையும் குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார். முதல்வர் அதை பெற்று காவல்துறை தலைமை இயக்குனரிடம் வழங்கினார். கொடி வழங்குதல் விழாவை முன்னிட்டு அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் உறையையும் குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார். அப்போது அஞ்சல் துறை தலைவர் செல்வகுமார் உடனிருந்தார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி என்ற மிகமிக உயர்ந்த அங்கீகாரத்தை தமிழக காவல்துறை பெற்றுள்ளது. இது, காவல்துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே கிடைத்துள்ள பெருமை என்று தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் கொடியை பெறும் நிகழ்வை முன்னிட்டு, காவல்துறை தலைமை இயக்குனர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று நலத் திட்டங்களை நிறைவேற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,327.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.