Show all

உத்தபிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக இல்லாத மூவர் முதல்வர் மற்றும் துணை முதல்வராகினர்

உத்தபிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக அரசு இன்று பதவியேற்றது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யாநாத் பதவியேற்றுக்கொண்டார்.

     அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேசத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. இந்த வெற்றியையடுத்து உத்தரபிரதேசத்தின் அடுத்த புதிய முதல்வர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் 44அகவை யோகி ஆதித்யாநாத் புதிய முதல்வராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, உத்தரபிரதேசத் தலைநகர் லக்னோவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பாஜக அரசு இன்று பதவியேற்றது. யோகி ஆதித்யாநாத்துக்கு உத்தரபிரதேச ஆளுநர் ராம் நாயக் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

     யோகி ஆதித்யாநாத் முதலமைச்சராக பதவியேற்ற பின் துணை முதல்வர்களாக உத்தரபிரதேச பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியாவும், கட்சியின் தேசியத் துணை தலைவர் தினேஷ் சர்மாவும் பதவியேற்றனர். அத்துடன் 47 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

     பிரம்மாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, அத்வானி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவைக் காணத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் பாரத் மாதாகி ஜே என்றும், வந்தே மாதரம் என்றும் முழங்கி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

     தேர்தல் கருத்துப் பரப்புதலின் போது  பாஜகவை கடுமையாக விமர்சித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் அவரது மகனும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவும் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்தனர். விழா மேடையில் அவர்கள் பிரதமர் மோடியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

     மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

     பதவியேற்பு விழா முடிந்த சிறிது நேரத்திலேயே உத்தரபிரதேச தலைமைச் செயலகத்திற்குச் சென்ற யோகி ஆதித்யாநாத் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டு தனது பணிகளைத் தொடங்கினார். அவரும் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்ட கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகிய மூவரும் உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர்களாக இல்லாததால் அடுத்த 6 மாதத்திற்குள் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.