Show all

தில்லியில் மாணவன், ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவத்தால் பரபரப்பு

தில்லியில் பள்ளிக்கு சரியாக வராததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி ஆசிரியரான முகேஷ் குமார், திங்கட்கிழமை காலை, பள்ளி வகுப்பறையில் மாணவர்களைத் தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, பள்ளிக்குள் நுழைந்த மாணவனும், வகுப்பறையில் இருந்த மாணவனும் சேர்ந்து ஆசிரியரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து விழுந்த ஆசிரியர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். ஒரு மாணவன் 18 அகவை நிறைவடைந்தவன் என்றும், மற்றொருவனுக்கு இன்னும் 2 மாதத்தில் 18 அகவை நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. பள்ளிக்குச் சரியாக வராமல், அனைத்துத் தேர்வுகளிலும் தோல்வி அடைந்த 6 மாணவர்கள் உள்ளனர். அவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததால், அந்த 6 மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பள்ளி தலைமை ஆசிரியரையும், தன்னையும் மிரட்டுவதாக, முகேஷ் ஏற்கனவே கூறியதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.