Show all

ரூ300 ஆக உயர்த்திக் கொள்ள அரசிடம் கோரிக்கையாம் செல்பேசி தரவுக்கு! தற்போதுதான் ரூ143 லிருந்து ரூ214 ஆக உயர்ந்தது.

மிடுக்குப்பேசி பயனர்கள் மாதம் ரூ143 செலவு செய்து வந்த நிலையில் தற்போது 214 செலவு செய்யும் வகையாக கட்டண உயர்வு முன்னெடுக்கப் பட்டிருக்கிறது. இதுவும் போத வில்லையாம். இதை ரூ300 ஆக மாற்றிக் கொள்ள அரசிடம் அடிப்படை விலை நிர்ணயிக்க கோரிக்கையை முன்னெடுத்து உள்ளன தொலைத் தொடர்பு நிறுவனங்கள். 

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடுத்த நிதிஆண்டுக்கான இந்திய வரவு-செலவுத் திட்டம் குறித்து சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது பாஜக அரசு. துறை வாரியாக அழைத்து பேசத் தொடங்கிவிட்டார்கள் அரசு தரப்பினர்கள். தங்கள் வரவு-செலவுத் திட்டத்தில் என்ன எல்லாம் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், கார்பப்ரேட் நிறுவனங்களின் கோரிக்கைகள் என்ன என்பதை விவாதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். 

அப்படி தொலைத்தொடர்புத் துறைக்கான கூட்டம் இன்று நடந்து முடிந்து இருக்கிறது. இந்தக் கூட்டம் முடிந்த பின், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் ஒரு அதிர வைக்கும் கருத்தைச் சொல்லி இருக்கிறார். இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு பயனர் மேனிக்கு வரும் வருவாய், 300 ரூபாய் அல்லது நான்கு அமெரிக்க டாலரைத் தொட வேண்டுமாம். அப்போது தான் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிதி நிலை மேம்படும் எனச் சொல்லி இருக்கிறார். 

அப்படியே ஒரு பயனரிடம் இருந்து வரும் வருவாய் மாதம் 300 ரூபாயைத் தொட்டாலும், அப்போதும், உலகிலேயே, இந்தியா தான் மலிவு விலையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நாடாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுச் சொல்லி, செல்பேசி பயனர்களுக்கு அதிர்ச்சயைக் கொடுத்துள்ளார். 

ஏர்டெல்லுக்கு கடந்த காலாண்டுக்கு ஒரு பயனருக்கு ரூ128 ரூபாய் மேனி வருவாய் வந்திருக்கிறதாம். ஜியோவுக்கு 120 ரூபாயாக இருக்கிறதாம். வொடாபோனுக்கு 107 ரூபாயாக இருக்கிறதாம். இதைத் தாம் 300 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் எனச் சொல்கிறார் ஏர்டெல் தலைவர். 

இப்படி, இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பயனர் மேனி வருவாயை அதிகரிக்க, இந்தியத் தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தலையிட்டு, தொலைத்தொடர்பு சேவைகளுக்கு ஒரு அடிப்படை விலையை நிர்ணயிக்க வேண்டும், எனச் சொல்லி இருக்கிறார் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல். 

அடிப்படை விலை என்றால் என்ன தெரியுமா? ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட விலைக்கு கீழ் வைத்து விற்கக் கூடாது என அரசு அமைப்பு உத்தரவிட்டால், அது தான் அடிப்படை விலை. இப்படி ஒரு பொருளுக்கு அடிப்படை விலையை நிர்ணயித்து விட்டால், அந்த விலைக்குக் கீழ் எந்த ஒரு நிறுவனமும் தன் பொருளை போட்டி போட்டு குறைந்த விலைக்கு விற்க முடியாது.

அன்றாடம் 1 ஜிபி தரவுத் திட்டத்தை இனி எந்த நிறுவனமும் மாதம் 300 ரூபாய்க்குக் கீழ் கொடுக்கக் கூடாது என இந்தியத் தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சொன்னால், இந்த திட்டத்துக்கு 300 ரூபாய் தான் அடிப்படை விலை. அப்படிப்பட்ட அறிவிப்புக்கு பின்னர் ஜியோ போல ஒரு நிறுவனம் தடாலடியாக உள்ளே வந்து மலிவு விலையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க முடியாது. 

இப்போது ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் சொல்வது போல, பயனர் மேனி வருவாய் 300 ரூபாயைத் தொட வேண்டும் என்றால் காலப் போக்கில், இரண்டு மடங்கு விலை ஏற்றினால் தானே அதைப் பற்றி யோசிக்க முடியும். ஆக விலை ஏற்றம் எந்த நேரத்திலும் வரலாம். 

ஆக, செல்பேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து மாதம் 300 ரூபாயை வசூலிக்க, வொடாபோன் ஐடியா, ஜியோ, ஏர்டெல் என அனைவரும் கை கோர்த்து விடுவார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, என்று தான் தோன்றுகிறது. அதன் முதல் படி தான் இந்த அடிப்படை விலையை நிர்ணயிக்கச் சொல்லிக் கேட்கும் கோரிக்கை. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,371.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.