Show all

நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு தடை

நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு இடைக்கால தடை. உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் கே.சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

ஈரோடு மாவட்டம், கதிரம்பட்டி கிராமத்தில் பெரும்பள்ளம் ஓடை உள்ளது. இந்த ஓடையில் உள்ள தண்ணீரை நம்பி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. அதுதவிர மழை காலத்தில் மழை வெள்ளம் இந்த ஓடை வழியாக தங்கு தடையின்றி சென்றால்தான், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் வராது.

ஆனால், இந்த ஓடையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. உச்ச  உயர்நீதிமன்றமும்   உயர்நீதிமன்றமும் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளன. ஆனால், இந்த பெரும்பள்ளம் ஓடையில் ஈரோடு வட்டாட்சியர் ஆணையின்படி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் ஆட்களை வைத்து மண்ணை கொட்டி வருகின்றனர்.

இதனால், நீர் ஓட்டம் பாதிக்கப்படுகிறது. கனமழை பெய்தால், குடியிருப்பு பகுதிக்குள் வௌ;ளம் புகுந்து விட வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதற்கு காரணம் நீர்நிலைகள் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டதே ஆகும். எனவே, பெரும்பள்ளம் ஓடையில் மணல் கொட்டுவதற்கு தடை விதிக்கவேண்டும். கொட்டப்பட்ட மணலை எடுத்து, ஓடையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நடுவர்கள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, பி.தேவதாஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நடுவர்கள் பிறப்பித்த உத்தரவில்,

மனுதாரர் குறிப்பிட்ட நீர்நிலை மட்டும் அல்லாமல், தமிழகத்தில் உள்ள ஏரி, ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் சாலை உள்ளிட்ட எந்த ஒரு கட்டுமானப் பணிகளையும் அரசு மேற்கொள்ளக்கூடாது.

நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதிக்கின்றோம். இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் சனவரி 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நடுவர்கள் கூறியுள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.