Show all

நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை எல்லாம் இழுத்து மூடினாலே, பல்லாயிரம் கோடி அளவிற்கான எரிபொருள் மிச்சப்படும்

07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் போக்குவரத்து சைகைகளில், வாகன இஞ்ஜின்களை சில மணித்துளிகள் இயங்கவிடாமல், அணைத்து வைத்தாலே, ரூ.250 கோடி அளவிற்கு எரிபொருளை சேமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியம் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழகம் இதுதொடர்பாக, தலைநகர் டில்லியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வு தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில், பெட்ரோலியம் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழக நிர்வாக இயக்குனர் அலோக் திரிபாதி, டில்லி போன்ற நாட்டின் 100 அதிக நெருக்கடியான சாலைகளில், போக்குவரத்து சைகைகளில்,  சிவப்பு, தோராயமாக 120 முதல் 180 வினாடிகள் வரை பயன்பாட்டில் இருக்கின்றன.

சிவப்பு சைகையின் போது, குறைந்த பட்சம் 20 வினாடிகளாவது, நாம் நம் வாகனத்தின் இஞ்ஜினை நிறுத்திவைத்தாலே, டில்லியில் மட்டுமே ரூ. 250 கோடி அளவிற்கு எரிபொருளை சேமிக்கலாம். இந்த உத்தியின் மூலம், எரிபொருள் செலவு மிச்சப்படுவது மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் மாசுபாடும் பெருமளவு தவிர்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான கருத்துப் பரப்புதலை, மத்திய சாலை ஆய்வு நிறுவனம், டில்லி போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்டு, மக்களுக்கு எரிபொருள் சேமிப்பின் முதன்மைத்துவத்தை, சுற்றுச்சூழல் மாசுபாடு குறைப்பு குறித்தும் அறிவுறுத்த வேண்டும் என்று திரிபாதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதே நேரம், நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை எல்லாம் இழுத்து மூடினாலே, பல்லாயிரம் கோடி அளவிற்கான எரிபொருள் மிச்சப்படும் என்பதை அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.

நகர உட்பகுதிகளில் சீரழிந்து கிடக்கிற சாலைகளைச் சீரமைத்தாலே, பல்லாயிரம் கோடி அளவிற்கான எரிபொருள் மிச்சப்படும் என்பதையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

சாலையின் இருபுறமும் மிதிவண்டிகளுக்கான பாதையை அரசு அமைத்துத் தருமேயானால், இன்னும் பல்லாயிரம் கோடி அளவிற்கான எரிபொருள் மிச்சப்படும் என்பதையும் அரசும் புரிந்து கொள்ள வேண்டும். என்கிற கருத்துப் பரப்புதலை நாம் அரசின் காது சார்ந்த மாற்றுத் திறனாளி காதில் எப்படி ஓதுவது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,919.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.